(வெளி 1:1-20)
“சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவனுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவனுமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்மிடத்தில் அன்பு கூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுக்குமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக, ஆமேன். இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமேன். இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். உங்கள் சகோதரனும் இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன். கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப்பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஒமேகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப் போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி; பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமேன்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும் இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.”
விளக்கவுரை
வசனம் 1: “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவனுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.”
வெளிப்படுத்தின விசேஷம் அப்போஸ்தலனாகிய யோவானால் எழுதப்பட்டது, அவன் பத்மு தீவில் இருந்தபோது இயேசுகிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்டவைகளை பதிவு செய்தான். சிறிது சிறிதாக அழிந்துகொண்டிருந்த ரோம சக்கரவர்த்தியான டொமீசியனின் ஆட்சியின் போது (கி. பி. 95) ஏஜியன் கடலின் தீவான பத்முவிற்கு யோவான் நாடு கடத்தப்பட்டு அனுப்பப்பட்டான். இயேசுவைக் குறித்தும் கர்த்தரின் வார்த்தையைக் குறித்தும் சாட்சி கூறியதற்காக யோவான் பத்மு தீவிற்கு நாடு கடத்தப்பட்டான். இந்த தீவிலே தான் இயேசுகிறிஸ்துவால் காண்பிக்கப்பட்ட கர்த்தரின் தன்மையை பரிசுத்த ஆவியானவராலும், தேவ தூதர்களாலும் தூண்டப்பட்டு யோவான் கண்டான்.
“இயேசுகிறிஸ்துவின் வெளிப்படுத்துதல்” என்பது என்ன? இயேசுகிறிஸ்துவின் வெளிப்படுத்தலால், இவ்வுலகிற்கும் பரலோக ராஜ்யத்திற்கும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அவரின் பிரதிநிதியான இயேசுகிறிஸ்துவின் மூலம் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தினார். அடிப்படையில் இயேசு யார்? அவரே படைப்பின் கர்த்தரும் இரட்சகருமானவர். அவர் மனிதகுலத்தை உலகின் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
வரப்போகிற புதிய ராஜ்யத்தின் கர்த்தர் இயேசுகிறிஸ்துவே வருகின்ற, இந்த புதிய உலகைக் குறித்து நமக்கு காட்டும் வெளிப்படுத்துதலாளர் அவரே. அவர் பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதியும் ஆவார். யோவானால் எழுதப்பட்ட வெளிப்படுத்துதலின் வார்த்தை மூலமாக, இயேசுவானவர் பழைய உலகை எப்படி சமாளித்து புதிய உலகத்தை எப்படித் திறப்பார் என்பதை நாம் காணலாம்.
வசனம் 2: “இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.”
சத்தியத்தின் வார்த்தைக்கு யோவானால் சாட்சியாக இருக்க முடிந்தது, ஏனெனில் பிதாவாகிய கர்த்தரின் மூலமாக எதிர்காலத்தில் இயேசுகிறிஸ்து என்ன செய்வார் என்று அவன் கண்டான். இயேசுகிறிஸ்துவின் மூலமாக எவையெல்லாம் நிறைவேறும் என்று யோவான் பார்க்கவும் கேட்கவும் செய்தான், ஆகவே, அவனால் இத்தகைய அனைத்துக் காரியங்களைக் குறித்தும் சாட்சி கூற முடிந்தது.
வசனம் 3: “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.”
யோவானால் சாட்சியாக அறிவிக்கப்பட்ட கர்த்தரின் வார்த்தையை வாசிப்பவர்களும் கேட்பவர்களும் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் யார்? கர்த்தரின் வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையடைந்து கர்த்தரின் மக்களாக மாறிய விசுவாசிகளே அவர்கள் என்பது முதலாவதும் முக்கியமானதும் ஆகும். பரிசுத்தவான்களாலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருக்கமுடியும் ஏனெனில் அவர்களே - இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரவிருப்பவைகளை - யோவானால் எழுதப்பட்டவைகளை வாசித்து கேட்டு, கர்த்தரின் வார்த்தையின் சாட்சியை கடைப்பிடிப்பவர்கள். கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு தம் விசுவாசத்தை அவர் மீது வைத்திருப்பதால், இப்படியாக கர்த்தரின் பரிசுத்தவான்களாகியவர்கள், பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவர்.
இப்பூமிக்கும் வானத்திற்கும் வரவிருப்பவைகளைக் குறித்து சத்தியத்தின் இரகசியங்களை யோவானின் மூலமாக கர்த்தர் நமக்கு முன்னறிவித்திருக்கவில்லையெனில், பரிசுத்தவான்களால் எப்படி இதனைக் கேட்கவோ பார்க்கவோ முடியும்? உலகம் அடையும் அனைத்து மாறுபாடுகளையும் முன் கூட்டியே அறிந்து அதனை விசுவாசிக்கும் ஆசீர்வாதத்தை அவர்களால் எப்படி பெற்றிருக்க முடியும்? இப்பூமிக்கும் பரலோகத்திற்கும் நேரிடவிருப்பவைகளை யோவானின் மூலமாக நமக்கு காண்பித்த கர்த்தருக்கே நன்றிகளையும் மகிமையையும் செலுத்துகிறேன். இக்காலத்தில் இயேசுகிறிஸ்துவின் மூலமாக கர்த்தரின் வார்த்தையின் வெளிப்படுத்துதலை பார்த்து அதனை தம் சொந்த கண்களால் காணமுடிந்தவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
வசனம் 4: “யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவனுமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்”
ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் தன் நிருபங்களை அனுப்புவதாக யோவான் இங்கு கூறுகிறான். பத்மு தீவில் அவன் கைதியாக இருக்கும்போது கர்த்தரின் தீர்க்கதரிசனங்களையும் வெளிப்படுத்துதலையும் பதிவு செய்த யோவான், அவற்றை ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும், உலகிலுள்ள அனைத்து கர்த்தரின் சபைகளுக்கும் அனுப்பினான்.
வசனம் 5: “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.”
யோவான் ஏன் இயேசுகிறிஸ்துவை “உண்மையுள்ள சாட்சி” என்று அழைக்கிறான்? பாவங்களில் இருந்தவர்களையும் தம் அழிவிற்கு கட்டுண்டவர்களையும் விடுவிக்கும் பொருட்டு நம் தேவன் இவ்வுலகிற்கு வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். இயேசுகிறிஸ்து தம் ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் அனைத்துப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றுக்கொண்டு, தம் சொந்த ஜீவனின் மூலமாக பாவத்திற்கு கிரயஞ்செலுத்தும் விதமாக சிலுவையில் மரித்து, மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் - இவையெல்லாம் விசுவாசிகளை இரட்சிக்கவும் அவர்களின் பாவங்களை சுத்திகரிக்கவுமே. உலகின் பாவிகளையெல்லாம் அவர்களின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தது இயேசுவேயாகையால், கிறிஸ்துவே இந்த இரட்சிப்பிற்கு சாட்சியாக இருக்கிறார்.
“மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும்” என்பதன் மூலமாக யோவான் நம்மிடம் கூறுகிறான், சட்டத்தின்படி அதற்கு தேவையானவைகளை நிறைவேற்ற இவ்வுலகிற்கு வந்த இயேசு, வேறுவார்த்தையில் கூறினால் பாவக்கிரயம் செலுத்துவதில் முதற்கனியானார் - இப்படிச் செய்ய, ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு, சிலுவையில் மரித்து, மீண்டும் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். கிறிஸ்து “நம்மை நேசித்து தம் சொந்த இரத்தத்தினால் கழுவினபடியால்” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போரை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் கர்த்தர் விடுதலையாக்கினார்.
வசனம் 6: “நம்மிடத்தில் அன்பு கூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மை கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுக்குமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக, ஆமேன்.”
பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதியான இயேசு, இவ்வுலகிற்கு மாம்சமாக வந்து தம் ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவை இரத்தத்தின் மூலமும் பாவிகளை இரட்சித்தார். இத்தகைய கிருபையின் செய்கைகளால், கிறிஸ்து நம்மை சுத்தப்படுத்தி நாம் கடவுளின் மக்களாகவும் அவரின் ஆசாரியர்களாகவும் செய்தார். தம்முடைய அதிசயமான கிருபையினால், இந்த ஆசீர்வாதங்களை நமக்களித்த பிதாவுக்கும், அவரின் பிரதிநிதியும் நம் இரட்சகருமாகிய குமாரருக்கும், அனைத்து மகிமையும் புகழும் நன்றிகளும் என்றென்றும் உரித்தாவதாக! கிறிஸ்து அவதரித்ததன் நோக்கம் நம்மை கர்த்தருக்கான பரலோக ராஜ்யத்தின் மக்களாக்கி அவரின் ஆசாரியர்களாக்குவதே. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், நாம் கர்த்தருடன் வாழப்போகும் பரலோக ராஜ்யத்திற்கான “இராஜாக்களாக்கப்பட்டோம்”.
வசனம் 7: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமேன்.”
கிறிஸ்து மேகங்களின் மீது வருவார் என்று இங்கு கூறப்பட்டுள்ளது. இதனை நான் முற்றிலும் விசுவாசிக்கிறேன். இது அறிவியல் கதையல்ல. இது இயேசுகிறிஸ்து பூமிக்கு பரலோகத்திலிருந்து வருவார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம் ஆகும். “அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்” என்று இங்கு கூறப்பட்டுள்ளது. இவர்கள் யார்? வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியை இந்த வார்த்தைக்கு அவர்கள் அனைவரையும் இரட்சிக்கும் வல்லமை இருந்தாலும், உலகின் அநேக மதங்களின் ஒரு தத்துவமாக எண்ணியவர்களே அவர்கள்.
கிறிஸ்து திரும்பி வரும்போது, தம் விசுவாசத்தால் அவரைக் குத்தியவர்கள் கண்டிப்பாக கவலையில் ஆழ்ந்து போவார்கள். அவர்கள் அழுது துக்கப்படுவார்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே, நற்செய்தியாகிய பாவ விடுதலை என்று அவர்கள் உணர்ந்து உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொள்ளவே இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் என்பதை உணரும்போது, அது அவர்களுக்கு காலம் கடந்ததாயிருக்கும்.
வசனம் 8: “இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.”
“அல்பாவும், ஒமேகாவும்” என்பதன் மூலமாக நம் தேவனே நியாயத்தீர்ப்பின் கர்த்தர் என்று யோவான் நம்மிடம் கூறுகிறான். முழு பிரபஞ்சத்தின் தொடக்கமும் முடிவும், மனிதகுலத்தின் வரலாறும் அவர் மூலமாக வரையறுக்கப்பட்டது. நீதிமான்களுக்கு பரிசளிக்கவும் பாவிகளைத் தீர்க்கவும் தேவன் திரும்ப வருவார். மக்களின் பாவங்களை நியாயந்தீர்த்து, அவரின் நீதியை விசுவாசிக்கும் நீதிமான்களுக்கு பரிசளிக்கும் மகத்துவமுள்ள கர்த்தர் அவரே.
வசனம் 9-10: “உங்கள் சகோதரனும் இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் பத்கு என்னும் தீவிலே இருந்தேன். கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப்பின்னாலே எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.”
உடன் விசுவாசிகள் ஒருவரை ஒருவர் அழைக்கும்போது “சகோதரன்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மறுபடியும் பிறந்த கர்த்தரின் ஆலயத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து ஒரே குடும்பமானவர்கள் ஒருவரையொருவர் சகோதரன் என்றும் சகோதரி என்றும் அழைக்கிறார்கள், இந்த உறவு முறை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்தால் நமக்கு வழங்கப்படுகிறது.
இங்கு “கர்த்தருடைய நாள்” என்பது இளைப்பாறும் நாளுக்கு பின் வரும் நாளான, இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழும்பிய நாளைக் குறிக்கிறது, மேலும் இதனால் தான் ஞாயிற்றுக்கிழமையை “கர்த்தருடைய நாள்” என்றழைக்கிறோம். இந்நாள் சட்டத்தின் காலம் நிறைவு பெற்றதையும் இரட்சிப்பின் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. மேலும், அவருடைய உயிர்த்தெழுதலினால், அவருடைய ராஜ்யம் இவ்வுலகிற்குரியதல்ல, என்று நம் தேவன் கூறினார்.
வசனம் 11: “அது நான் அல்பாவும் ஒமேகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.”
இயேசுகிறிஸ்துவின் வெளிப்படுத்தலின் மூலம் தான் கண்டவற்றை யோவான் எழுதி, அவற்றை கடிதங்களாக ஆசியாவிலுள்ள ஏழு ஆலயங்களுக்கு அனுப்பினான். நமக்கு முன்பாக கடந்து சென்ற அவரின் ஊழியர்களின் மூலமாக கர்த்தர் அனைத்து சபைகளுடனும் பேசுகிறான் என்பதை இது கூறுகிறது.
வசனம் 12: “அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்”
அப்போஸ்தலர்களின் நாட்களில் வேதவசனங்கள் நிறைவுபடாமல் இருந்தமையால் அடையாளங்களையும், சாட்சிகளையும் சீடர்களுக்கு காண்பிக்கவேண்டியிருந்தது. யோவான் கர்த்தரிடமிருந்து வந்த ஒலியைக் கேட்கத் திரும்பியபோது, “ஏழு பொன் குத்துவிளக்குகளைக் கண்டான். இங்கு குத்துவிளக்குகள் கர்த்தரின் சபைகளைக் குறிப்பிடுகிறது, இக்கூட்டத்தின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வெளிப்படுத்தலை விசுவாசிக்கும் பரிசுத்தவான்களின் ஏழு சபைகளுக்கும் தேவனாயிருக்கிறார், அவரே பரிசுத்தவான்களைப் பாதுகாக்கும் மேய்ப்பராக இருந்தவரும், இருக்கிறவருமாயிருக்கிறார்.
வசனம் 13: “அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.”
“மனுஷகுமாரனுக்கொப்பானவராக” “ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே” யோவான் கண்டதாக கூறுவது இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது. பரிசுத்தவான்களின் மேய்ப்பராக அவர் இருப்பதினாலே, இயேசுவானவர் தம்முடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணமாகிய சத்திய வார்த்தைகளை விசுவாசிப்போர்களிடம் வருகை புரிந்து அவர்களிடம் பேசுகிறார். “நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த” என்ற யோவானின் கிறிஸ்துவைக் குறித்த வர்ணனை நம் தேவனின் நிலையானது பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதி என்று குறிப்பிடுகிறது.
வசனம் 14: “அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது”
நம் தேவன் முற்றிலும் பரிசுத்தவான், மகத்துவமுள்ளவர், மரியாதைக்குரியவர். “அவருடைய கண்களும் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது” என்று மகத்துவமுள்ள கர்த்தராகிய அவர் அனைவருக்குமான நீதிபதி என்று குறிப்பிடுகிறது.
வசனம் 15: “அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது.”
இயேசு யாரென நாம் எண்ணுகிறோம்? அவர் முற்றிலுமாக கர்த்தர் என்று பரிசுத்தவான்கள் விசுவாசிக்கிறார்கள். நம் தேவன் மகத்துவமானவர், அவரிடம் எந்த பலவீனமுமில்லை. அவர் பூமியில் வாழ்ந்தபோது நம்முடைய பலவீனங்களை அனுபவித்திருந்தமையால் நம்முடைய சூழ்நிலைகளையும், இடங்களையும் நன்கு அறிந்திருப்பவராகையால், அவரால் நன்கு உதவமுடியும். அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது அவர் எத்தனை பரிசுத்தம் நிறைந்தவரென்பதையும் நம் தேவன் எத்தனை மகத்துவமானவர் என்பதையும் காட்டுகிறது. நம் தேவனிடம் குறைவிற்கோ பலவீனத்திற்கோ எந்த அடையாளமுமில்லை. அவர் தம் பரிசுத்தத்தினாலும், அன்பினாலும், கம்பீரத்தினாலும், மரியாதையினாலும் நிறைந்தவர்.
வசனம் 16: “தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.”
“தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்” என்பது அவர் கர்த்தரின் சபையை பாதுகாக்கிறார் என்று பொருள்படும். மறுபுறம் அவர் வாயிலிருந்து “இரு புறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது” என்பது இயேசு அதிகார வார்த்தையுடனும் கர்த்தரின் வல்லமையுடனும் பணியாற்றும் மகத்துவமுள்ளவர் என்பதைக் குறிக்கிறது. “வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போல்” நம் தேவன் வார்த்தையின் கடவுளாகவும், எங்கும் வியாபித்துள்ளவராகவும் இருக்கிறார்.
வசனம் 17: “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப் போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி; பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்.”
கர்த்தரின் பரிசுத்தத்திற்கு முன்பு நாம் எத்தனை பலவீனமானவர்கள் என்றும் எத்தனை இருளிலும் இருந்தோம் என்றும் இவ்வசனம் நமக்கு காண்பிக்கிறது. நம் தேவன் சதாகாலங்களிலும் உள்ளவராயும் நிறைவானவராகவும் இருக்கிறார். கர்த்தரின் ஊழியர்களுக்கு சில சமயங்களில் நண்பராகவும், மற்ற நேரங்களில் கண்டிப்புடைய நீதியின் கர்த்தராகவும் அவர் தோன்றுகிறார்.
வசனம் 18: “மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமேன்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.”
நம் தேவன் எப்போதும் வாழுகிறார். கர்த்தராகிய பிதாவின் பிரதிநிதியாக அவர் இருப்பதால் அவரிடம் பரலோகத்தின் அதிகாரம் இருக்கிறது. அவர் மனிதகுலத்தின் இரட்சகராகவும் நீதிபதியாகவும் இருப்பதால், அவரிடம் நித்திய வாழ்வு மற்றும் மரணம் மீது முழு அதிகாரமும் பெற்ற கர்த்தராயிருக்கிறார்.
வசனம் 19: “நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும் இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது”
கர்த்தரின் ஊழியர்களுக்கு, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கர்த்தரின் செய்கைகளின் நோக்கங்களை பதிவு செய்யும் கடமை இருக்கிறது. ஆகவே தேவன் யோவானிடம் வெளிப்படுத்தியவற்றை விசுவாசத்துடன் பரப்பும்படி கூறினார், கர்த்தரின் ஆலயத்தின் விசுவாசமானது நித்திய ஜீவனைப் பெற்றுத் தருவதுடன், எதிர்காலத்தில் வரும் அனைத்துக் காரியங்களையும் பெற்றுத் தருவதாகவும் இருக்கிறது. இதனைத்தான் கர்த்தர் யோவான் மூலமாக நம்மை பணிபுரியும்படி கூறினார்.
வசனம் 20: “என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.”
“ஏழு நட்சத்திரங்களின் இரகசியம்” என்ன? நம்மை கர்த்தர் தம்முடைய ஊழியர்களின் மூலமாக தம் மக்களாக மாற்றுவதன் மூலம் தன் ராஜ்யத்தைக் கட்டுவார் என்பதாகும். “பொன் குத்து விளக்குகள்” என்பது, கர்த்தர் மனிதகுலத்திற்கு அளித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் பரிசுத்தவான்களால் கட்டப்பட்ட கர்த்தரின் ஆலயங்களைக் குறிக்கிறது.
அவருடைய ஊழியர்களின் மூலமாகவும் தம் ஆலயத்தின் மூலமாகவும், தம்முடைய நோக்கம் இதுவென்றும் எதிர்காலத்தில் இவ்வுலகிற்காக காத்திருப்பது என்னவென்றும் கர்த்தர் விசுவாசிகளுக்கு காட்டுகிறார். அவர் யோவானுக்கு காட்டி பதியச் செய்த வெளிப்படுத்தலின் வார்த்தையின் மூலமாக, நாமும் கூட, சீக்கிரமாகவே அவரின் செய்கைகளை நம் கண்களால் காண்போம். இவ்வுலகத்தில் சம்பவிக்கப்போகும் அனைத்துக் காரியங்களையும் வெளிப்படுத்திய கர்த்தரின் தெய்வீக அருளிற்காக அவரை நான் புகழுகிறேன்.