(வெளி 2:18-29)
“தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில் தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்கு போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப் படுவார்கள். விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.”
விளக்கவுரை
வசனம் 18: “தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது”
யேசபேலின் போதனைகளை ஆலயத்திற்கு அனுமதித்தமை தீயத்தீரா சபையின் தவறாகும். ஆகாப் ராஜாவின் மனைவியாகிய யேசபேல் சிலைவணக்கத்தை இஸ்ரவேலிற்கு எடுத்துவந்து, மக்களை விபசாரம் செய்யும்படி மயக்கி விக்கிரகங்களுக்குப் படைத்த பலி காணிக்கைகளை உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்தாள். இயேசுவிடம் “அக்கினி ஜூவாலைப் போன்ற கண்களும்” இருப்பதாக விவரிப்பதின் மூலம், தம் ஆலயங்களில் தவறான விசுவாசமுடையவர்களைக் கண்டித்து தீர்ப்பதாக கர்த்தர் எச்சரிக்கைச் செய்கிறார்.
வசனம் 19: “உன் கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.”
அதே சமயம் தியத்தீரா சபையின் ஊழியனும் அதன் பரிசுத்தவான்களும் முன்பைவிட சிறப்பாக தம் செய்கைகளைச் செய்வதாக கர்த்தர் கூறினார்.
வசனம் 20: “ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில் தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்கு போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.”
கள்ளத்தீர்க்கதரிசியான ஒரு பெண்ணின் போதனைகளை ஏற்றுக்கொண்டதே தியத்தீரா சபையின் பிரச்சினையாகும். வேசியாகிய யேசபேல் போன்ற கள்ளத்தீர்க்கதரிசியை ஆலயத்தினுள் அனுமதித்து அவளின் போதனைகளை பின்பற்றியதால், பரிசுத்தவான்கள் தம் மாமிசத்தின் இச்சையைத் தேடுவதில் முடிவடைந்தார்கள். இதன் பலனாக, கர்த்தரின் பயங்கரமான கோபாக்கினை அவர்கள் மேல் வரவேண்டியதாயிற்று.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களை பரிசுத்தவான்கள் என்று உண்மையான கர்த்தரின் சபை அழைப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் தம்மிருதயங்களில் இல்லாதவர்களையும் கூட ஆலயத்தின் தலைமைப் பொறுப்பிற்கு அது நியமிப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்கள் கர்த்தருக்கு பதிலாக தம் மாமிசத்தையும் உலகத்தையும் நாடுவதால், கர்த்தரின் ஆலயத்தில் அவர்களை அனுமதிக்கவோ பொறுத்துக்கொள்ளவோ கூடாது.
வசனம் 21: “அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.”
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளாமல், மாம்சத்திற்குரியவர்களாகவே இருப்பவர்களால் பரிசுத்த ஆவியானவர் பேசுவதை அறிந்து அதனைக் கேட்க முடியாது என இது கூறுகிறது. இதனால் தன் விபசாரத்திற்காக இந்த பெண் கள்ளத்தீர்க்கதரிசியால் மனம் வருந்த முடியவில்லை. இதன் பலனாக அவள் பரிசுத்த ஆவியானவரின் வாளால் தாக்கப்பட்டு, சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் அழிந்து போனாள்.
உண்மையான கர்த்தரின் சபையில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களாலேயே, கர்த்தரின் ஊழியர்களாக நியமிக்கப்படமுடியும், ஒரு போதகர் இவ்வுலகில் எத்தனை சிறந்தவராய் இருந்தாலும் கூட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களால் விசுவாசமிக்க கர்த்தரின் பிள்ளைகளை அவரிடம் வழி நடத்தும் தலைவர்களாக முடியாது. ஆகவே, கள்ளத்தீர்க்கதரிசிகளைப் பிரித்துணர்ந்து அவர்களை நாம் ஆலயங்களிலிருந்து விரட்டி அடிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் தான் கர்த்தரின் ஆலயத்தால் சாத்தானின் தந்திரங்களிலிருந்து தப்பி, ஆவிக்கேற்றபடி அவரைப் பின்பற்ற முடியும்.
வசனம் 22: “இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி”
கர்த்தரின் ஊழியன் பொய்யர்களைப் பிரித்துணர்ந்து அவர்களை அறிவிக்காவிட்டால் கர்த்தரே விபசாரம் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை மகா உபத்திரவத்திற்குள் விடுவார் என இவ்வசனம் நமக்குக் கூறுகிறது. கர்த்தரே தன் ஆலயங்களைச் சுத்தமாக வைத்து அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துகிறார் என்பதை கர்த்தரின் பரிசுத்தவான்களும் ஊழியர்களும் அறிந்துகொள்ளவேண்டும்.
உண்மையான கர்த்தரின் ஆலயத்தில் கள்ளப்போதகர்களுக்கு இடமில்லை. அங்கு கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்தால் கர்த்தரே அவர்களைக் கண்டுபிடித்து தீர்ப்பார். கள்ளத்தீர்க்கதரிசிகளால் கர்த்தரின் ஆலயத்திற்கு குழப்பங்கள் எடுத்து வரும்போது கர்த்தர் அவர்களை மகா உபத்திரவத்தால் தண்டிப்பார்.
வசனம் 23: “அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.”
கர்த்தர் தம் ஆலயத்திலிருந்து கள்ளத்தீர்க்கதரிசிகளை விரட்டுகிறார். இப்படிச் செய்வதால் அவரே தன் சொந்த ஆலயத்தை பாதுகாக்கிறார் என்று அனைவரும் அறிந்துகொள்வர். கர்த்தர் தம்முடைய ஆலயத்தைப் பொறுப்பெடுத்துக்கொள்கிறார் என்றும் நம் விசுவாசத்தின் செய்கைகளுக்கு அவர் சன்மானம் வழங்குகிறார் என்பதையும் அறிந்துகொள்வர்.
வசனம் 24: “தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.”
அவரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, கர்த்தரின் பரிசுத்தவான்களாகியவர்கள் உலகின் முடிவு வரையும் தம் விசுவாசத்தைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டுமென இது பொருள்படுகிறது. ஆகவே, இந்த நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தரின் ஆலயத்துடனும் பரிசுத்தவான்களும் தம்மிருதயங்களை இணைத்து வாழும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிவுவரை தம் விசுவாசத்தைப் பாதுகாக்கவேண்டும். கர்த்தரின் உண்மையான ஆலயம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டும் பிரசங்கிக்காமல், இந்த நற்செய்தியின் மீது விசுவாசம் வைத்து பொய்யர்களை பகிரங்கப்படுத்தவேண்டும்.
வசனம் 25: “உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.”
விசுவாசிகள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இழந்துபோகாமல், தேவன் திரும்பி வரும் நாள்வரையும் அதனை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு அதிக வல்லமையும் அதிகாரமும் இருக்கிறது. இது சாத்தானை மேற்கொள்வதற்கு அளவுக்கும் அதிகமானதாகும். இந்த விசுவாசத்தால் பரிசுத்தவான்கள் கர்த்தரைப் பிரியப்படுத்தமுடியும். பரிசுத்தவான்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதன்படி வாழ்ந்து உண்மையான கர்த்தருடைய ஆலயத்தில் தொடர்ந்திருந்தால் முடிவுகாலத்தில் கூட மேற் கொண்டவர்களாயும் வெற்றிப்பெற்றவர்களாயும் இருக்கமுடியும்.
வசனம் 26: “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக் கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.”
கர்த்தர் அவர்களுக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலமாக பரிசுத்தவான்களால் தம் அனைத்துப் பகைவர்களையும் மேற்கொள்ள முடியும். நமக்கு எப்போதுமே வெற்றியளிக்கும் போராக இப்போர் இருக்கும். இப்படியாக அனைத்து கிறிஸ்தவர்களும் இறுதிகாலத்தில் அந்திகிறிஸ்துவுடன் போராடி இரத்தசாட்சியாக மரிப்பர், இதன் பலனாக, தேவனுடன் கூட இருந்து ஆளும் வல்லமை அவர்களுக்கு கொடுக்கப்படும்.
வசனம் 27: “அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள்.”
இரத்தசாட்சியாக மரித்த பரிசுத்தவான்களுக்கு தேவன் தம் ராஜரீகத்திற்கான அதிகாரத்தை வழங்குவார். இவ்வசனம் கூறுவதைப் போல் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள்.
வசனம் 28: “விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.”
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் எதிரிகளுக்கெதிராக போராடுபவர்களுக்கு கர்த்தரின் வார்த்தையிலுள்ள உண்மையை அறிந்துகொள்ளும் ஆசீர்வாதம் வழங்கப்படும்.
வசனம் 29: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது”
கர்த்தரின் ஆலயத்தின் மூலமாக வரும் பரிசுத்த ஆவியானவரின் குரலை எல்லாப் பரிசுத்தவான்களாலும் கேட்கமுடியும், ஏனெனில் கர்த்தரின் ஊழியர்கள் மூலமாக ஆவியானவர் அனைத்து பரிசுத்தவான்களுடனும் பேசுகிறார். கர்த்தரின் சபை மூலமாக, தாம் கேட்பது அவரின் குரல் என்பதை பரிசுத்தவான்கள் அறிந்து கொள்ளவேண்டும்.