(வெளி 3:7-13)
“பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன். என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு. ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன் மேல் எழுதுவேன். ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.”
விளக்கவுரை
வசனம் 7: “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது”
தேவன் எல்லாவற்றிற்கும் ராஜாவாக பரலோக ராஜ்யத்தை ஆளுகிறார். கர்த்தர் முழு அதிகாரமும் வல்லமையும் உடையவர் -அவர் திறப்பதை யாராலும் மூடமுடியாது. அவர் மூடுவதை யாராலும் திறக்கமுடியாது. நம் தேவன் இப்பூமிக்கு வந்த நிறைவான கர்த்தராயிருக்கிறார், அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக பாவிகளை அவர்களின் அனைத்து பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமே பரலோகத்தின் கதவு திறக்கப்பட முடியும். அதனை வேறெதுவாலும் திறக்க முடியாது, ஏனெனில் இந்த ராஜ்யத்திற்கு சொந்தமானவைகளெல்லாம் நம் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கின்றன.
வசனம் 8: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியிலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.”
கர்த்தரின் ஆலயத்தின் மூலம் நற்செய்தியின் கதவை தேவன் திறந்தார். தேவனின் அனுமதியில்லாமல் யாராலும் அக்கதவை மூடமுடியாது. தேவன் திரும்பிவரும் நேரமாகிய முடிவுவரை பரிசுத்தவான்கள் தம் முதல் விசுவாசத்தை இறுகப்பற்றிக்கொள்ளவேண்டும். கர்த்தரின் ஊழியர்களிடமும் அவரின் பரிசுத்தவான்களிடமும் இருக்கவேண்டிய விசுவாசம் இத்தகையதே. அவர்களுடைய விசுவாசம் தொடக்கத்தில் பெரிதானதாகவும் முடிவில் ஒன்றுமில்லாததாகவும் இருக்கக்கூடாது. தேவன் அவர்களுக்கு முதலில் அளித்த மாறாத விசுவாசத்தை பற்றிக்கொள்ளவேண்டும்.
பரிசுத்தவான்களின் விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் விசுவாசமாயிருக்கிறது, இவ்விசுவாசம் நம் தேவனின் பரலோக ராஜ்யம் இப்பூமிக்கும் புதியவானத்திற்கும் புதிய பூமிக்கும் வரும் எனவும், இந்த ராஜ்யத்தில் நாமனைவரும் நித்தியமாக வாழுவோம் எனவும் விசுவாசிப்பதாயிருக்கிறது. வருகின்ற தேவனைச் சந்திக்கும் அந்நாள்வரை பரிசுத்தவான்கள் இந்த விசுவாசத்தை இறுகப்பற்றிக்கொள்ளவேண்டும்.
பிலதெல்பியா சபையின் ஊழியனிடமும் பரிசுத்தவான்களிடமும் சிறிதளவு பலமே இருந்தது. அவர்களிடமும் பலகுறைபாடுகள் இருந்தன. ஆயினும், மிக முக்கியமாக அவர்கள் கர்த்தரின் வார்த்தையை கடைப்பிடித்தனர், தேவனுடைய பெயரை அவர்கள் மறுக்கவில்லை.
வசனம் 9: “இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.”
சில தவறான விசுவாசிகளை அவர்களின் முழங்காலிற்கு கொண்டுவருவதாக கர்த்தர் கூறினார், இப்படிச் செய்வதால் தன் ஆலயமாகிய பிலதெல்பியா சபையை கர்த்தர் எத்தனையாய் அன்பு கூர்ந்தார் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். “யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில்” என்பது தாம் தம் விசுவாசத்தினால் கர்த்தரை மகிமைப்படுத்துகிறோம் என்று தம்மைக் கருதும் யூதர்களைக் குறிக்கிறது. ஆனால் அவர்களில் அநேகர், அப்படிச் செய்வதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் சாத்தானின் ஊழியர்களாக மாறி கர்த்தரின் ஆலயத்தையும் அவரின் பரிசுத்தவான்களையும் தடுக்கின்றனர்.
முன்புபோலவே இந்நாட்களிலும் கூட, இயேசுவின் பெயரை அழைத்து அவரை ஆராதித்தவர்களில் அநேகர் சாத்தானின் ஊழியர்களாகி, சாத்தானால் அவனின் கருவிகளாக உபயோகப் பட்டனர். குறிப்பாக பிலதெல்பியா சபையின் ஊழியன் மீது கர்த்தர் தன் அன்பைக் காண்பித்தார், அவனைத் தன் மதிப்பின் பாத்திரமாக உபயோகப்படுத்தினார்.
வசனம் 10: “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.”
குறிப்பாக பிலதெல்பியா சபையின் ஊழியன் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க தீவிரித்தமைக்காக தேவன் அவனைப் பாராட்டினார். இத்தகைய சிறந்த பொறுமை இல்லாவிட்டால், கர்த்தரின் வாக்குத்தத்த வார்த்தைகளெல்லாம் நிறைவேறும் வரை நம்மால் காத்திருக்க முடியாது, ஆகவே அவருடைய கட்டளைகளைத் தொடந்து கடைபிடிக்க கர்த்தரின் வார்த்தை மீது முழு நம்பிக்கை இருக்கவேண்டும். பிலதெல்பியா சபையின் தொடர் முயற்சிகளுக்காக அதற்கு தேவன் சிறப்பு பரிசினைக் கொடுத்தார். சோதனையின் நேரத்தில் பிலதெல்பியா சபையை அதனிலிருந்து தப்புவிப்பதாக அப்பரிசு இருந்தது. இங்கு சோதனையின் நேரம் என்பது அந்திகிறிஸ்து எடுத்துவரும் தடைகளைக் குறிக்கிறது.
வசனம் 11: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு.”
தேவனின் வருகை மிகவும் சமீபமாயிருப்பதால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தை பரிசுத்தவான்கள் பாதுகாக்கவேண்டும். அவர்கள் தேவன் வாக்குத்தத்தம் செய்த புதிய வானம் புதிய பூமியை விசுவாசித்து அதற்காகக் காத்திருக்கவேண்டும். கர்த்தரின் ஊழியர்கள் பரிசுத்தவான்களுடனிருந்து அவர்கள் தம் விசுவாசத்தை இழந்து போகாதபடி பாதுகாக்கவேண்டும். ஆகவே அவர்களுக்கான கர்த்தரின் பரிசு திருடப்படாது.
வசனம் 12: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்.”
சாத்தானை வெல்லுபவர்கள் இரத்தசாட்சிகளின் குழுவில் சேருவர். அவர்களுடைய பெயர்கள் கர்த்தரின் ராஜ்யத்திலுள்ள பரிசுத்த ஆலயத்திலும் எழுதப்படும். இப்போதும் கூட அவர்கள் கர்த்தரின் ஆலயத்தின் பெரிய ஊழியர்களாக பயன்படுத்தப் படுகின்றனர், அவர்கள் தொடர்ந்தும் அத்தகைய கருவிகளாக தேவனால் பயன்படுத்தப்படுவர்.
வசனம் 13: “ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.”
கர்த்தரின் வார்த்தையைக் கேட்கும் காதுள்ளவர்கள் கர்த்தரின் ஊழியர்களும் அவரின் பரிசுத்தவான்களும் ஆவர். கர்த்தரின் சபைமூலமாக ஆவியானவர் பேசுவதை அவர்கள் கேட்கின்றனர். கர்த்தர் அருளிய ஆலயத்தினுள் கர்த்தரின் ஊழியர்களும் அவரின் பரிசுத்தவான்களும் இருக்கவேண்டும். இந்த ஆலயத்தை அவர்கள் பாதுகாத்து அதற்கு அரணாக இருக்கவும் வேண்டும்.