(வெளி 6:1-17)
“ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது அவன் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப் பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன், நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தம் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தம் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும் அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப் படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம்போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள். அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.”
விளக்கவுரை
வசனம் 1: “ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.”
கர்த்தர் மனிதகுலத்திற்கு ஏற்படுத்திய அனைத்து திட்டங்களும் எழுதப்பட்டிருக்கும் புஸ்தகத்தை பிதாவினிடமிருந்து பெற்று அதன் முதல் திட்டத்தை இயேசு திறந்தார் என்று இவ்வசனம் நமக்கு கூறுகிறது.
வசனம் 2: “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது அவன் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.”
முதலாவது முத்திரையின் மூலமாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இயேசுகிறிஸ்துவினுள் ஏற்படுத்தியதைக் குறித்து கர்த்தர் கூறுகிறார். இது மனிதகுலத்தை பாவத்திலிருந்து விடுவிப்பதற்கான திட்டமென்பதோடு, அதன் வெற்றியையும் குறிக்கிறது. மனிதகுலத்தை அவர்களின் பாவங்களிலிருந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக இயேசுகிறிஸ்துவிற்குள் இரட்சிப்பதன் மூலம் அவரின் மக்களாக மாற்றுவது பிதாவாகிய கர்த்தரின் திட்டமாகும் -அதாவது, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் மனிதகுலத்தை விடுவிப்பது அவர் திட்டமாகும்.
கர்த்தர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் ஆத்துமாக்களை உலகின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார், நாம் இதனைப் பேசிக்கொண்டிருக்கும் போதும் அவர் அதனைத் தொடர்ந்து செய்கிறார். கர்த்தரின் இந்த முதல் திட்டமானது மனிதகுலத்தின் இரட்சிப்பாகும், அது இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது, அவர் ஞானஸ்நானம் பெற்றது, சிலுவையில் மரித்தது, உயிரோடெழுந்தது ஆகியவை மூலம் சாத்தியமாகிற்று.
வெள்ளை நிறக் குதிரையின் காலமென்பது மனிதகுலத்தை அதன் பாவங்களிலிருந்து விடுவிக்க அவர் நிறைவேற்றிய நற்செய்தியினால் கர்த்தருக்கு கிடைத்த வெற்றியைக் குறிப்பிடுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி தொடர்ந்து வெற்றி பெறும் எனவும் இது கூறுகிறது.
வசனம் 3-4: “அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப் பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.”
கர்த்தர் திட்டமிட்ட இரண்டாவது காலத்தில், உலகம் சாத்தானுடைய உலகமாகி விடுமென இது நமக்கு கூறுகிறது. சிகப்பு நிறக் குதிரை தோன்றியது என்பது உலகம் சாத்தானின் ஆளுகைக்குள் வருமென பொருள்படும்.
சாத்தான் இவ்வுலகிற்கு யுத்தத்தை எடுத்து வந்து, அதன் சமாதானத்தை எடுத்துப் போட்டான். அவனால், இவ்வுலகம் இரண்டு உலக யுத்தங்களினூடே சென்றது, அதனால் எண்ணிலடங்காத மக்கள் மரித்தனர். அதில் பிழைத்தவர்கள் சமாதானம் இல்லாதவர்களாய், கவனிப்பாரற்று வாழ்ந்தனர். இப்போதும் கூட உலகிலுள்ள தேசங்களும் நாடுகளும் ஒன்றை ஒன்று நம்பாமல் ஒன்றுடன் ஒன்று போரிட்டு, அநேக இடங்களில் சமாதானத்தை நொறுக்குகின்றன. இக்காலம் போரின் மற்றும் மக்களைக் கொல்லும் காலமாகும்.
வசனம் 5-6: “அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன், நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.”
கர்த்தர் மூன்றாவதாக கூறும் காலம் கறுப்புக் குதிரையின் காலமாகும், இது மனிதர்கள் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும், பஞ்சத்தை அனுபவிக்கும் காலமாகும். இன்றைய உலகம் முழுவதும் ஆவிக்குரிய பஞ்சம் நிலவுவதால் அநேக மக்கள் இரட்சிக்கப் படாதவர்களாயுள்ளனர். சரீரப்பிரகாரமான பஞ்சத்தினால் அநேகர் மரிக்கின்றனர். நாம் இந்த மூன்றாம் காலத்தில் இருக்கிறோம் என்பதை நினைவு கூறவும். இக்காலம் முடியும்போது, பழுப்பு நிறக்குதிரையின் காலம் வரும்.
வசனம் 7-8: “அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.”
கர்த்தர் ஏற்படுத்திய நான்காவது காலம், மங்கின நிறக்குதிரையின் காலமாகும்; இக்காலத்திலேயே அந்திகிறிஸ்து தன் செயல்களைத் தொடங்குவான் என்றும், பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பதும் இக்காலமே என்றும் வேதாகமம் நமக்குக் கூறுகிறது. பரிசுத்தவான்களின் விசுவாசத்தை உரித்துப்போடும்படி, தன்னை வணங்காதமைக்காகவும், அவனுடைய குறியீட்டை பெறாதமைக்காகவும் அந்திகிறிஸ்து அவர்களைத் துன்புறுத்தி கொல்லுவான். இப்போதிருந்து உலகம் ஏழு எக்காளங்களின் வாதைகளை அனுபவிக்கும். இப்போது பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பது தவிர்க்க முடியாததாகும்.
வசனம் 9-11: “அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தம் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தம் கொல்லப் பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப் பட்டது; அன்றியும் அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப் படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக் காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.”
கர்த்தரின் ஐந்தாவது காலம் பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும் நிகழும் காலமாகும். இக்காலத்திற்கு பிறகு ஆயிரவருட அரசாட்சி தொடங்கும். நமக்காக காத்திருக்கும் இரத்தசாட்சியாக மரித்தலையும் உயிர்த்தெழுதலையும் எடுத்துக்கொள்ளப்படுதலையும் நாம் விசுவாசிக்க வேண்டுமெனவும் கர்த்தர் நமக்கு வாக்குத்தத்த்தம் பண்ணிய புதிய வானம் மற்றும் புதிய பூமியை எதிர்பார்த்து விசுவாசத்துடன் வாழவேண்டுமெனவும் இவ்வசனம் கூறுகிறது.
வசனம் 12: “அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.”
கர்த்தரின் ஆறாவது காலம் அவர் படைத்த முதல் உலகத்தின் அழிவு காலமாக இருக்கும். இக்காலத்திலேயே ஏழு பாத்திரங்களின் வாதைகள் இப்பூமியின் மீது வரும், அப்போது சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஒளியிழந்துபோகும், பூமியதிர்ச்சிகளினால் பூமி நீரில் மூழ்கும்.
வசனம் 13: “அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப் படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.”
இந்த ஆறாவது காலத்தில், கர்த்தரால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் அழிவு ஏழு பாத்திரங்களின் வாதையால் நிகழும். அநேக விண்கற்கள் வானத்திலிருந்து விழுவதாலும், பூமி தலைகீழாகி விடுவதாலும், உலகினை பெரிதான குழப்பம் மூழ்கடிக்கும்.
வசனம் 14: “வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம்போலாகி விலகிப் போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.”
ஏழு பாத்திரங்களின் வாதைகள் ஊற்றப் படும்போது, புத்தகச் சுருள் சுருட்டப்படுவதைப் போல் வானம் மறைந்துபோய் மலைகளும் தீவுகளும் அவற்றின் இடங்கள் மாறிப்போகுமென இவ்வசனம் கூறுகிறது -பேரழிகள் உலகின் அமைப்பையே மாற்றும், உலகையே நொறுக்கும் விதமாயிருக்கும்.
வசனம் 15: “பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு”
ஆறாவது முத்திரையின் காலத்தில் ஏழு பாத்திரங்களின் வாதைகளையும் கர்த்தர் ஊற்றியபிறகு, இவ்வுலகில் யாரும், ராஜாக்களோ அல்லது வல்லமை படைத்தவர்களோ, ஆட்டுக்குட்டியானவரின் பெருங்கோபத்திற்கு பயப்படாதவர்களோ நடுங்காதவர்களோ இருக்கப்போவதில்லை.
வசனம் 16: “பர்வதங்களையும் கன்மலைகளும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.”
கர்த்தரின் பெருங்கோபம் மிக அதிகமாயிருப்பதினாலே, மனிதகுலம் பயத்தினால் நடுங்கும். மனிதகுலம் பயத்தினால் தாக்கப்படுவது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும்.
வசனம் 17: “அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்”
ஏழு பாத்திரங்களின் வாதைகள் ஊற்றப்பட்ட போது, எல்லோருமே அவர்கள் எத்தனை வல்லமையுள்ளவர்களாகவோ, பலமுள்ளவர்களாகவோ இருந்தாலும், மேலிருந்து கர்த்தரின் பெருங்கோபத்தினால் கீழிறங்கும் பேரழிவுகளினால் பயந்து நடுங்குவர். கர்த்தரின் பெருங்கோபத்திற்கு முன் பயமில்லாது நிற்பது யாருமில்லை.
அப்படியானால் ஏழாவது காலம் எது? பரிசுத்தவான்கள் ஆயிரவருட அரசாட்சியில் வாழ்வதும், அவர்கள் நித்தியமாக வாழப்போகும் புதியவானம், புதியபூமி ஆகியவை அதனைத் தொடருவதுமான காலம் கர்த்தர் ஏற்படுத்திய ஏழாவது காலமாகும்.