(வெளி 11:1-19)
“பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார். ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள். என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு. அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள். அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது. ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத் தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.”
கர்த்தருடைய வார்த்தையாயிருப்பதினாலே வெளிப்படுத்தின விசேஷத்தின் வார்த்தையாகிய 11ஆம் அதிகாரம் நமக்கு முக்கியமானது. உலகத்தை அழிக்க வேண்டுமானால் அதற்கு முன் கர்த்தரால் செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான செயலொன்று உண்டு. இது இஸ்ரவேலர்களைக் கடைசி முறையாக அறுவடை செய்வதாகும். புறஜாதியாருக்கும் இஸ்ரவேலருக்கும் கர்த்தர் செய்ய வேண்டிய இன்னொரு வேலையுமுண்டு. அவர்களை இரத்தசாட்சியாக்கி, முதல் உயிர்த்தெழுதலில் பங்கேற்கச் செய்து அவர்களை எடுத்துக் கொள்வதே அது.
இந்தப் பிரச்சனைகளின் மொத்தக் கணக்கையும் வேதாகமம் அளிப்பதிலிருந்து கர்த்தரின் இரட்சிப்பாகிய பாவ மன்னிப்பு எப்படி புதிய ஏற்பாட்டில் நிறைவேறுகிறது என்பதை நாம் காண வேண்டும். நாம் இவைகளைக் குறித்து நெருக்கமாக ஆராயாவிட்டால் வெளிப்படுத்தின விசேஷத்தில் வரும் பரிசுத்தவான்கள், கர்த்தரின் ஊழியர்கள், இஸ்ரவேல் மக்கள் ஆகியவர்களைக் குறித்த குழப்பமுடையவர்களாய் இருப்போம் என்பதால் வேத வசனங்கள் நம்முடன் பேசுகின்றன.
விளக்கவுரை
வசனம் 1: பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவு கோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
கர்த்தரின் கிருபையால் இஸ்ரவேல் மக்களை பாவங்களிலிருந்து இரட்சிக்கும் செயல் இப்போது தொடங்கவிருக்கிறது என இது கூறுகிறது. “அளத்தல்” என இங்கு குறிப்பிடப்படுவது முடிவு காலத்தில் இஸ்ரவேல் மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்க கர்த்தர் தாமே நேரடியாக செயல்படுவார் என பொருள்படும்.
அதிகாரம் 11 இன் முக்கிய வசனங்களில், இஸ்ரவேல் மக்கள் பாவங்களிலிருந்து இரட்சிப்படைவதைக் குறித்து காண வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அப்போதிலிருந்து இஸ்ரவேல் மக்களிடம் பரப்பப்படும் என இவ்வார்த்தைக் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவால் வழங்கப்பட்ட கிருபையின் இரட்சிப்பின் மூலம் இஸ்ரவேலர்கள் தம் பாவங்களிலிருந்து விடுதலையாகி கர்த்தரின் மக்களாக்கும் கர்த்தரின் பணி தொடங்குவதைக் கூறுகிறது. முடிவு காலத்தில் இஸ்ரவேலர்களின் பாவங்களுக்கு அவர் அளிக்கும் பாவ மன்னிப்பை வெளி 11இல் கர்த்தர் கூறியுள்ளார் “அளத்தல்” என்று வசனம் 1 மற்றும் 2இல் காணப்படுவது அனைத்திற்கும் ஒரு தரத்தை ஏற்படுத்துவது என பொருள்படும். கர்த்தர் தனது ஆலயத்தை அளப்பதற்கான காரணம், அவர் இஸ்ரவேலர்களை இரட்சிக்க ஏற்கனவே முடிவு செய்தமையால், அவர்கள் தம்முடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள தம்மிருதயங்களை ஆயத்தமாக வைத்துள்ளார்களா இல்லையா என கண்டுபிடிப்பதற்காகும். அவர்களுடைய இருதயங்கள் ஆயத்தமாக இருக்காவிட்டால் அவர்களுடைய இருதயங்களை ஆயத்தப்படுத்துவதினால் அவை செவ்வையாகும்.
வசனம் 2: ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப் பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
புறஜாதியாரை மூன்றரையாண்டுகள் அலைக் கழிக்கும் அதிகாரத்தைச் சாத்தானுக்கு கர்த்தர் வழங்கினார். ஆகவே விடுதலையின் வார்த்தையாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏழு வருட உபத்திரவக் காலத்தின் முதல் மூன்றரையாண்டுகளில் எத்தனைச் சீக்கிரமாக பெற்றுக் கொள்ள முடியுமோ அத்தனைச் சீக்கிரமாக புற ஜாதியார் தமது இருதயங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும். மகா உபத்திரவ காலத்தின் முதல் பாதி முடிந்து அடுத்த பாதிக்குள் செல்கையில் உலகின் வரலாறு முடிவடையும். வெகுசீக்கிரமாக புறஜாதியாரும் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்களும் சாத்தானால் துன்புறுத்தப்படும் நேரம் வரும்.
ஆகவே புற ஜாதியார் தம் பாவங்களுக்கு பாவ மன்னிப்பைப் பெற்று உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கடந்து போவதற்கு முன் இரத்தசாட்சியாக மரிக்கும்படி தம் விசுவாசத்தை ஆயத்தம் செய்ய வேண்டும். இந்த நேரத்திலும் அதாவது பயங்கர உபத்திரவத்தின் முதல் மூன்றரையாண்டுகளின் போது இஸ்ரவேல் மக்களும் துன்புறுவர். ஆனால் இந்நேரத்தில் இயேசுவே தமது இரட்சகர் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வர். முடிவில் மகாஉபத்திரவத்தின் முதல் மூன்றரை ஆண்டுகளில் இஸ்ரவேல் மக்கள் தம் பாவங்களிலிருந்து தம் இரட்சிப்பைப் பெறுவர். மகா உபத்திரவ காலத்தின் போதும் இஸ்ரவேல் மக்களுக்குத் தனது இரட்சிப்பைக் கர்த்தர் வழங்குவார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
வசனம் 3: என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
இஸ்ரவேல் மக்களுக்கு சாட்சியாக தனது ஊழியர்கள் இருவரைக் கர்த்தர் தோற்றுவிப்பார். இஸ்ரவேல் மக்களுக்காக கர்த்தரால் ஏற்படுத்தப்படும் தீர்க்கதரிசிகள், பழைய தீர்க்கதரிசிகளின் வல்லமையைப் போல் இரண்டு பங்கு வல்லமை உடையவர்களாக இருந்து, அவர்களின் சாட்சியத்தின் மூலம் கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் செயல்படத் தொடங்குவார். இதனால் இயேசு கிறிஸ்துவைத் தமது இரட்சகராக அவர்கள் ஏற்றுக் கொள்வர். இந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் செயல்களின் மூலமாக அநேக இஸ்ரவேலர்கள் மறுபடியும் பிறந்து கர்த்தரின் மக்களாவார்கள்.
இஸ்ரவேலர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்க முடிவு காலத்தில் கர்த்தர் அனுப்பப்போகும் இரண்டு தீர்க்கதரிசிகளும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து இஸ்ரவேலர்கள் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளையும் பின்பற்றுமாறு செய்து அவர்கள் இயேசுவிடம் திரும்பி அவரைத் தமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளுமாறு செய்வர். மகா உபத்திரவக் காலத்தில் முதல் மூன்றரை ஆண்டுகளின் 1,260 நாட்களாக இஸ்ரவேல் மக்களை கர்த்தரின் வார்த்தையால் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் போதிப்பர். இஸ்ரவேல் மக்களுக்கு நற்செய்தியாகய நீர் மற்றும் ஆவியை அருளச் செய்து அதனை அவர்கள் விசுவாசிக்கும்படிச் செய்து புதிய ஏற்பாட்டின் காலங்களில் புறஜாதியார்கள் தம் விசுவாசத்தால் எப்படிபட்ட இரட்சிப்பைப் பெற்றார்களோ அத்தகைய இரட்சிப்பை இஸ்ரவேலருக்கும் வழங்குவார்.
வசனம் 4: பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
“இரண்டு ஒலிவ மரங்கள்” என இங்கு குறிப்பிடப்படுவது கர்த்தரின் இரண்டு தீர்க்கதரிசிகளாகும் (வெளி 11:10) “இரண்டு விளக்குத் தண்டுகள்” எனக் குறிப்பிடப்படுவது புற ஜாதியார்கள் நடுவில் உருவாக்கிய கர்த்தரின் ஆலயத்தையும், இஸ்ரவேல் மக்களுக்காக அவர் அனுமதித்த ஆலயத்தையும் குறிப்பிடுகிறது. கர்த்தர் தமது ஆலயத்தை யூதர்களுக்கும் புற ஜாதியாரான நமக்கும் ஏற்படுத்தினார். கடைசி தினம் வரை ஆத்துமாக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் வேலையை அவர் தொடர்ந்து செய்வார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி அவர்களுடன் பேசி தீர்க்கதரிசிகளைத் தோற்றுவித்ததைப் போல் முடிவு காலம் வருகையில் இஸ்ரவேல் மக்களில் இருந்து அவரின் வார்த்தையைப் பிரசங்கிக்கும் படியாக இரண்டு தீர்க்கதரிசிகளைத் தோற்றுவித்து இந்தத் தீர்க்கதரிசிகளின் மூலமாக இஸ்ரவேலர்களை இயேசுவிடம் வழிநடத்தப் போவதைக் குறித்து “இரண்டு ஒலிவ மரங்களும்” “இரண்டு விளக்குத் தண்டுகளும்” என்பதன் மூலமாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
புறஜாதியாரிலிருந்து தோன்றிய கர்த்தரின் ஊழியர்களை ஏற்றுக் கொள்ள இஸ்ரவேலர்கள் தவறியதுடன், இந்த ஊழியர்கள் மூலமாக கர்த்தர் அவர்களுக்கு கூறுபவைகளையும் அவர்கள் கேட்டதில்லை. பழைய ஏற்பாட்டின் பலியிடும் முறையைக் குறித்தும் தீர்க்க தரிசனங்களைக் குறித்தும் அவர்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல் கடைசி காலத்தில் கர்த்தரின் தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் மக்களிடமிருந்தே உயர்த்தப்பட வேண்டியவர்களால் இருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் வேதவசனங்களில் மிகத் தெளிவாக இருப்பவர்கள் ஆவர். ஓடிக் கொண்டிருக்கும் போது கூட முழு வேதாகமத்தையும் அவர்களால் மனனஞ் செய்து ஒப்புவிக்க முடியும். இதனால் தான் புறஜாதியாரிலிருந்து தோன்றிய கர்த்தரின் ஊழியர்கள் கூறுவதை அவர்கள் விசுவாசிப்பதில்லை.
ஆகவே நீங்களும் நானும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்பதைக் கேட்டு கர்த்தரின் ஊழியர்கள் அவர்களின் மக்களிலிருந்தே தோன்றுவர். அவர்களிலிருந்தே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் தோன்றும் போது அவர்களிலிருந்து இரண்டு தீர்க்கதரிசிகள் கர்த்தரால் எழுப்பப்படுவர். அவர்கள் கர்த்தரின் வார்த்தைகளைப் பிரசங்கித்து அவற்றை விளக்குவார்கள். அப்பொழுதுதான் இஸ்ரவேலர்கள் விசுவாசிக்கத் தொடங்குவர்.
தம்மைப் பாவங்களிலிருந்து இரட்சிக்க இறுதி காலத்தில் கர்த்தரால் அனுப்பப்பட்ட இந்த இரண்டு சாட்சிகளும் அவருடைய தீர்க்கதரிசிகளே என இஸ்ரவேல் மக்களுக்கு அப்பொழுது தெரியும். பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் ஊழியர்கள் தமது மகத்தான வல்லமையை உபயோகித்ததைப் போலவே இத்தீர்க்கதரிசிகளும் தம் வல்லமையை உபயோகிப்பர். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளை இவர்கள் நன்கு அறிவதோடு, அவர்களை விசுவாசிக்கவும் செய்தனர். இந்த இரண்டு சாட்சிகளும் செய்யப் போகும் அதியசங்களை இஸ்ரவேல் மக்கள் தம் கண்களால் காண்பார்கள். இதிலிருந்து இஸ்ரவேல் மக்கள் இயேசு கிறிஸ்துவிடம் திரும்பி, தேவனை விசுவாசிப்பர். நாம் செய்வதைப் போலவே இயேசு கிறிஸ்து தேவகுமாரனும் இரட்சகருமாவார் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் போது நம்மைப் போன்ற விசுவாசம் அவர்களிடமும் இருக்கும். அதாவது அவர்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப்படுவர்.
இந்த இரண்டு சாட்சிகளும் கர்த்தரின் வார்த்தையை விளக்கி, மகா உபத்திரவ காலத்தின் ஏழாண்டு காலத்தின் 1260 நாட்கள் இஸ்ரவேல் மக்களை அதனால் போதிப்பார்கள். புதிய ஏற்பாட்டின் புறஜாதியாரான நீங்களும் நானும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டதைப் போன்றே, இஸ்ரவேலர்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, இறுதி காலத்தில் அவர்களும் இரட்சிப்படைவதைக் கர்த்தர் அனுமதிப்பார்.
வசனம் 4 கூறுவதைப் போல் “பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.” இந்த இரண்டு சாட்சிகளையும் “இரண்டு ஒலிவமரங்கள்” என வேதாகமம் அழைக்கிறது. இரண்டு ஓலிவ மரங்களும் முடிவு காலத்தில் வரப்போகும் இரண்டு தீர்க்கதரிசிகளைக் குறித்து கூறுகிறது. வசனம் 10இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது “அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.” இந்த இரண்டு ஓலிவ மரங்களும் யாரென நாம் கண்டுபிடிக்க இவ்வார்த்தையின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தரின் ஆலயத்திலுள்ள பரிசுத்த வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் அலங்கரிக்க, ஒலிவமர எண்ணெய்யால் அபிஷேகிக்கப்பட்ட ஒலிவமர இலைகள் பயன்படுத்தப்பட்டன. ஆலய விளக்குகளிலும் அது உபயோகிக்கப்பட்டது. சுத்தமான ஒலிவமர எண்ணெய்யையே ஆலயத்தில் அவர்கள் உபயோகிக்க வேண்டும். எந்த எண்ணெய்யையும் தனது ஆலயத்தில் உபயோகிப்பதைக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. ஒலிவ மர எண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாயிருந்தார். இப்படியாக ஒலிவ மரமும், அத்தி மரமும் இஸ்ரவேல் மக்களைக் குறிப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு ஒலிவ மரங்களையும் இரண்டு விளக்குத்தண்டுகளையும் குறித்த அநேக விளக்கங்கள் இருக்கின்றன. தாமே ஒலிவ மரங்கள் என சில மக்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் அபிக்ஷேகிக்கப் பட்டவர்களையே இவ்விரண்டு ஒலிவ மரங்களும் குறிப்பிடுகின்றன. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒருவர் தீர்க்கதரிசியாகவோ, அரசனாகவோ, அல்லது ஒரு ஆசாரியராகவோ நியமிக்கப்படுகையில் மட்டுமே அபிக்ஷேகிக்கப்பட்டனர். இப்படியாக ஒருவர் அபிக்ஷேகிக்கப்படும் போது பரிசுத்த ஆவியானவர் அவன் மேல்/அவள் மேல் இறங்குவார். பரிசுத்த ஆவியானவரால் கர்பந்தரிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் ஒலிவ மரம் குறிப்பிடுகிறது (ரோமர் 11:24) இதனைக் குறித்து மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
இரண்டு ஒலிவ மரங்கள் என முக்கிய வசனங்கள் முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சாட்சிகளும் கர்த்தரின் இரண்டு ஊழியர்களைக் குறிக்கின்றன. இஸ்ரவேலர்களை இரட்சிப்பதற்காக இறுதி காலத்தில் இவர்களைக் கர்த்தர் தோற்றுவிப்பார்.
வசனம் 4 இதனை தான் நமக்குக் கூறுகிறது. புறஜாதியார்களுக்கு கர்த்தர் அனுமதித்த கர்த்தரின் ஆலயத்தையும், இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் அனுமதித்த ஆலயத்தையும் இரண்டு விளக்குத் தண்டுகள் குறிக்கின்றன. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர்களிடம் கர்த்தரின் ஆலயம் இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டிலிருந்து இந்த கர்த்தரின் ஆலயம் அவர்களிடம் இல்லை. ஏன்? அவர்கள் இன்னமும் இயேசு கிறிஸ்துவை அங்கீகரிக்காததும், பரிசுத்த ஆவியானவரைத் தமது இருதயங்களில் பெற்றுக் கொள்ளாதமையுமே இதன் காரணம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையோ அல்லது இயேசு கிறிஸ்துவையோ ஏற்றுக் கொள்ளாததால் கர்த்தரின் ஆலயம் அவர்களிடமிருந்து காண முடியாது போயிற்று. ஆயினும் உலகின் முடிவிற்கு முன்னால், மகா உபத்திரவத்தின் முதல் மூன்றரையாண்டுகளின் போது இஸ்ரவேல் மக்களுக்கும் தனது ஆலயத்தைக் கர்த்தர் அனுமதிப்பார். இதனால் தான் இரண்டு சாட்சிகளாகிய இரண்டு ஒலிவ மரங்களைக் குறித்து வேதாகமம் நம்மிடம் கூறுகிறது.
தேவன் தன் ஆலயத்தை ஏற்படுத்தி யூதர்கள் மற்றும் புறஜாதியார் ஆகியவர்களிடம் பாவங்களிலிருந்து ஆத்துமாக்களை இரட்சிக்கும் பணியை செய்வார். இந்த ஆலயங்களின் மூலமாக அந்திகிறிஸ்து தோன்றும் வரையில் ஆத்துமாக்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்கும் வேலையை அவர்கள் செய்யும்படி செய்வார். அவரின் ஆலய உறுப்பினர்களாகிய பரிசுத்தவான்களிடமிருந்து பாத்திரங்களை உருவாக்கி பாவங்களில் தம்மை இழந்து போன ஆத்துமாக்களை இரட்சிக்கும் ஊழியத்திற்கு அவர்களை தயார் செய்வார் எனவும் இது பொருள்படுகிறது. ஆகவே மீதியிருக்கும் ஊழியத்தை விசுவாசத்துடன் நாம் செயல்படுத்த வேண்டும்.
வசனம் 5: ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
தம்முடைய சிறப்பு ஊழியத்தை செய்யும் விதமாக இரண்டு தீர்க்கதரிசிகளுக்கும் கர்த்தர் இந்த அதிகாரத்தை வழங்கினார். இறுதி காலத்தில் இஸ்ரவேலர்கள் மனந்திரும்பி சாத்தானை மேற்கொள்ளும்படியாக இந்த இரண்டு சாட்சிகளை அனுப்பினார். இவர்களை யாராவது காயப்படுத்த முயன்றால் அவர்களே காயப்பட்டு போவர்கள். அவர் வார்த்தையின் வல்லமையானது இந்த இரண்டு சாட்சிகளுடனும் எப்போதும் இருக்கும்.
இந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் போதனைகளை விசுவாசிக்கும் இஸ்ரவேல் மக்கள், இயேசு கிறிஸ்துவிடம் திரும்புவர். இதனால் தான் இரண்டு ஒலிவ மரங்களை அதாவது இரண்டு சாட்சிகளை இஸ்ரவேலர்களுக்கு அனுப்புகிறார். இதனால் இறுதி காலத்தில் இஸ்ரவேலர்கள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட முடியும்.
வசனம் 6: அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
தம்முடைய வல்லமையின் செயல்களைச் செய்யும்படி கர்த்தரின் ஊழியர்களை அவர் ஏற்படுத்தும் வரை இஸ்ரவேல் மக்கள் மனந்திரும்பமாட்டார்கள் என்பதால் இந்த இரண்டு சாட்சிகளையும் தனது அதிகாரத்துடன் செயல்படுவதை கர்த்தர் அனுமதிப்பார். இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் இஸ்ரவேலரை இயேசுவிற்குள் திருப்புவது மட்டுமின்றி தம் வல்லமையால் கர்த்தரின் எதிரிகளை அவர்கள் மேற்கொண்டு தாம் அழைக்கப்பட்டதின் நோக்கங்களை நிறைவேற்றுவர். அனைத்து தீர்க்கதரிசன வார்த்தைகளையும் இஸ்ரவேல் மக்களுக்குப் போதிக்கும் வகையில் கர்த்தர் அவர்களுக்கு சிறப்பான வல்லமையை வழங்குவதால் அவர்கள் காத்துக் கொண்டிருக்கும் மேசியா இயேசு கிறிஸ்துவே என்றும் சாட்சி கூறி அதனை அவர்கள் விசுவாசிக்கும்படி செய்வர்.
வசனம் 7: அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும் போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.
ஏழாண்டுகள் நடைபெறும் மகா உபத்திரவக் காலத்தின் முதல் மூன்றரை ஆண்டுகள் கடக்கும் போது அந்திகிறிஸ்து இவ்வுலகில் தோன்றுவான் என வார்த்தை நமக்குக் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவே வரப் போகும் மேசியா என விசுவாசிப்போருக்காக, இறுதியில் இஸ்ரவேல் மக்களிடமிருந்து தோன்றுவதற்கான நேரம் இதுவே. அநேக விசுவாசிகள் அந்திகிறிஸ்து மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் ஆகிய மிருகத்திடமிருந்து தமது விசுவாசத்தைக் காப்பதற்காக இரத்த சாட்சிகளாக்கப்படுவர். கர்த்தரின் இரண்டு தீர்க்கதரிசிகளும் கூட தமது வேலை முடிந்து போவதால் இரத்த சாட்சிகளாய் மரிப்பர்.
இந்த இரண்டு சாட்சிகளும் கர்த்தரின் சித்தத்தினால் அந்திகிறிஸ்துவால் கொல்லப்படுவர். ஏன்? இரத்த சாட்சிகளுக்கு அளிக்கும் ஈவை அவர்களுக்கும் அளிக்கவே கர்த்தர் இப்படிச் செய்கிறார். முதல் உயிர்த்தெழுதலிலும், ஆட்டுக்குட்டியானவரின் திருமணப் பந்தியில் தேவனுடன் சேரவும், எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும், நித்திய வாழ்வைப் பெறவும் அவர்கள் அப்போது ஆயத்தமாயிருப்பார்கள். இந்த ஆசீர்வாதங்களை பரிசுத்தவான்கள் பெற்றுக் கொள்ள அவர்கள் இரத்த சாட்சியாவதை கர்த்தர் விரும்புகிறார். ஆகவே பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாவதை தவிர்க்கவோ அல்லது பயப்படவோ கூடாது. அதற்கு பதிலாக உறுதியான விசுவாசத்தால் அதனைத் தழுவி ஆசீர்வாதப் பரிசுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வசனம் 8: அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
இந்த “இரண்டு சாட்சிகளும்” இஸ்ரவேல் மக்களிடத்திலிருந்து உருவாவர் என இந்த வசனம் நமக்குக் கூறுகிறது. இஸ்ரவேல் மக்களுக்காக கர்த்தர் தோற்றுவிக்கும் இரண்டு சாட்சிகளும் புறஜாதியாரிலிருந்து தோற்றுவிக்கப்படாமல் தனது சொந்த இஸ்ரவேல் மக்களிடமிருந்தே தோற்றுவிப்பார். இயேசு சிலுவையிலரையப்பட்ட அதே இடத்திலேயே இந்த இரு சாட்சிகளும் கொல்லப்படுவர். இது அவர்களிருவரும் இஸ்ரவேலர்களென நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. இஸ்ரவேல் மக்களுக்கான கர்த்தரின் ஊழியர்கள் இவர்களாவர்.
இஸ்ரவேல் மக்களை ஆவிக்குரிய படி பார்த்தால் சோதோம் மற்றும் எகிப்தின் மக்களைப் போன்றவர்கள். கர்த்தர் தனது இரு தீர்க்கதரிசிகளை நியமித்து அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி இஸ்ரவேலர்கள் வருவாரெனக் காத்திருக்கும் மேசியா இயேசுவே என சாட்சி கூறுவர். இதனால் இஸ்ரவேல் மக்களால் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியும்.
இயேசு சிலுவையிலரையப்பட்ட கொல்கொதா என்ற இடத்தில் கர்த்தரின் ஊழியர்களை அந்திகிறிஸ்து கொல்லுவான். அந்திகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்களாதலால் இந்த இரண்டு சாட்சிகளையும் கொல்லுமளவிற்கு வெறுப்பர். இந்த சாட்சிகள் இயேசுவை விசுவாசித்து அவரிற்காக சாட்சி கூறுவர். ரோம போர்ச்சேவகர்கள் இயேசுவை சிலுவையிலரைந்து அவரின் விலாவை ஈட்டியால் குத்தியதைப் போல் இந்த தீய ஆவிகள் இயேசுவை மட்டும் வெறுக்கலாம். கர்த்தரின் இரண்டு சாட்சிகளையும் கூட வெறுத்து அவர்களைக் கொல்லுவான்.
வசனம் 9: ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக் காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
இயேசு கிறிஸ்துவைத் தமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் இஸ்ரவேல் மக்களுக்குள்ளும் இருக்கிறார்கள். இரண்டு ஊழியர்களின் (இரண்டு ஒலிவ மரங்கள்) மாமிச மரணத்தைக் கண்டு அவர்களுடைய வெற்றியினால் உணர்ச்சிவசப்பட்ட இம்மக்கள், அந்த வெற்றி உணர்ச்சியை அதிகப்படுத்த அந்த சாட்சிகளை அடக்கம் செய்யமாட்டார்கள். இந்த இரண்டு சாட்சிகளையும் கர்த்தர் மீண்டும் உயிருள்ளவர்களாக்குவதால் அம்மனிதர்களின் வெற்றி துண்டுதுண்டாக வெடித்து சிதறும். ஆகவே அவர்கள் கர்த்தருக்கு பயப்படுவார்கள்.
கர்த்தரின் இரண்டு ஊழியர்களின் மரணத்திற்காக ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் இம்மகிழ்ச்சி நீடித்திருக்காது. ஏனெனில் சீக்கிரமாகவே அந்திகிறிஸ்து இயேசு கிறிஸ்துவிற்கு சமமானவனில்லை எனக் கண்டுகொள்வார்கள். ஏமாற்றமும், வெறுமையும் அவர்களை ஆட்கொள்ளும்.
இந்த இரண்டு தீர்க்கதரிசிகளாலும் பிரசங்கிக்கப்பட்ட கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தைகளை இம்மக்கள் விரும்பமாட்டார்கள். கர்த்தர் தோற்றுவிக்கும் இந்த இரண்டு ஊழியர்களுக்கு எதிராக நிற்பதின் மூலம், இரட்சிப்பின் கடைசி அறுவடையிலிருந்து துண்டிக்கப்பட்டு சாத்தானைப் பின்பற்றுபவர்களாக அவர்களிருப்பர்.
வசனம் 10: அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
இஸ்ரவேலர்களின் இரட்சிப்பிற்காக தோற்றுவிக்கப் பட்ட இந்த இரண்டு சாட்சிகளும் கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பிரசங்கிப்பது சாத்தானைப் பின்பற்றுவோருக்கு பெரிய வேதனையாயிருக்கும். இந்த இரண்டு சாட்சிகளின் மரணத்தினால் அவர்கள் மகிழுவர் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பரிசுகளைப் பரிமாறுவர்.
நம்மை நெருக்குபவர்கள் மறைந்து போனால் நாமும் கூட மகிழ்ச்சி அடைவோம். கர்த்தர் தமது வார்த்தையைப் பிரசங்கிக்கும் படி இந்த இரண்டு சாட்சிகளை எழுப்பும் போது அந்திகிறிஸ்துவும் அவனைப் பின்பற்றுவோரும் அதனை வெறுப்பர். கர்த்தரின் வாதைகளைக் கேட்கும் போது அவர்களுடைய ஆவி துன்பத்தினால் நிறையும். இந்த சாட்சிகள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்கு கூறும் போதெல்லாம் அவர்கள் துன்பப்பட்டமையால் அந்திகிறிஸ்து அவர்களைக் கொன்ற போது அதனால் மகிழுவர். இதனால் தான் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிசளித்து பாராட்டிக் கொள்வர்.
வசனம் 11: மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
முதல் உயிர்த்தெழுதலில் பங்கேற்க இந்த இரண்டு சாட்சிகளையும் கர்த்தர் அனுமதிப்பார். தேவன் அருளிய இரட்சிப்பின் வார்த்தையை விசுவாசித்து இரட்சிக்கப்பட்ட பிறகு தமது இந்த நம்பிக்கையை பாதுகாக்க இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்பார்கள் என்பதே இந்த வார்த்தைக்கான அத்தாட்சியாகும்.
ஜீவ சுவாசம் “மூன்றரை நாட்களுக்குள்” அவர்களுக்குள் நுழையும் என்பது சிறிது நேரத்திலேயே தேவன் அவர்களின் உயிர்த்தெழுதலை அனுமதிப்பார் என்பதைக் குறிக்கிறது. அவர் தனது மாமிசத்தின் மரணத்திலிருந்து உயிரோடெழும்பியதைப் போன்றது இது. இந்த முதலாம் உயிர்த்தெழுதலாகிய கர்த்தரின் மிகப் பெரிய ஆசீர்வாதம் பரிசுத்தவான்களுக்கான கர்த்தர் அருளிய விசுவாசமாயிருக்கையில் இச்செய்தியானது பாவிகளுக்கு மனவருத்தத்தையும் பயத்தையும் உருவாக்கும். முதலாம் உயிர்த்தெழுதல் கர்த்தரின் வாக்குத்தத்தமாகவும், விசுவாசத்திற்கான அவரின் ஈவாகவும் இருக்கிறது.
வசனம் 12: இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
அனைத்துப் பரிசுத்தவான்களும் உயிரோடெழுப்பப் பட்டு எடுத்துக் கொள்ளப்படுவதை இவ்வார்த்தைக் குறிக்கிறது. தேவனின் தீர்க்கதரிசன வார்த்தைகளை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கபட்ட அனைவருக்கும், தம் விசுவாசத்தைக் காக்க இரத்த சாட்சியாக மரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த பரிசுத்தவான்கள் அனைவரும் தேவனால் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்பதை இந்த வசனம் நமக்கு காட்டுகிறது. அவரின் மீதுள்ள விசுவாசத்திற்காக இரத்தசாட்சிகளாய் மரித்த பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் ஆகாயத்திற்கு உயர்த்தப்படும் (எடுத்துக் கொள்ளப்படுதல்) ஆசீர்வாதத்தைப் பெறுவர். ஏனெனில் அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள். அவர் நமக்களித்த பாவமன்னிப்பை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டு இரத்த சாட்சிகளாய் மரித்தமைக்கு சன்மானமாக தேவன் நமக்கு அளிக்கும் உயிரோடெழுப்பப்படுதவதற்கும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கும் அவருக்கு நன்றி கூறாமல் இருக்க முடியாது.
இயேசு கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அந்திகிறிஸ்துவை எதிர்த்து இரத்த சாட்சியாக மரித்த அனைவருக்கும் பிதாவாகிய கர்த்தர் உயிரோடெழுப்பப்படுவதையும் எடுத்துக் கொள்ளப்படுதலையும் அனுமதிக்கிறார். இதனை நாம் விசுவாசிக்க வேண்டும். பரிசுத்தவான்கள் உயிரோடெழும்புவதும் எடுத்துக் கொள்ளப்படுவதும் ஆசீர்வாதமாகும். அது கர்த்தர் அருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் கிட்டிய இரட்சிப்பிலிருந்து ஓடுகிறது. சாத்தானும் அவனது கூட்டாளிகளும் துன்புறுத்தி கொன்ற பரிசுத்தவான்கள் இறுதியில் மீண்டும் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுதலைக் காணும் போது தம்முடைய முயற்சிகள் பலனின்றிப் போனதைக் காணுவர்.
இரத்த சாட்சியாகிய பரிசுத்தவான்களை உயிரோடெழுப்பி கர்த்தர் அவர்களை எடுத்துக் கொள்வார். ஆனால் இன்னமும் பூமியிலிருப்பவர்கள் மீது ஏழு பாத்திரங்களின் வாதைகளை ஊற்றி முற்றிலுமாக அழிப்பார். இந்த வேலை உடனடியாக முடிவுபெற்று பரிசுத்தவான்களுடன் அவர் கீழே இறங்கி வந்து கிறிஸ்துவின் திருமணப் பந்திக்கு நீதிமான்களை அழைப்பார். இந்த பந்தி ஆயிரம் வருடங்கள் நடக்கும். இந்த ஆயிரம் வருடங்கள் முடியும் போது பாதாளத்திலிருந்து சாத்தானை எழும்பி வரச் செய்து கர்த்தருடனும் அவரது பரிசுத்தவான்களுடனும் போரிட செய்வார். ஆனால் சாத்தானையும் அவனது கூட்டாளிகளையும் அழித்து நித்திய அக்கினியில் எரியும்படியாக தீர்ப்பார். ஆயினும் நீதிமான்கள் தேவனுடைய பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசித்து அவருடன் நித்தியமாக வாழ்வர்.
வசனம் 13: அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
இஸ்ரவேலர்களின் இரட்சிப்பிற்காக கர்த்தர் அனுப்பிய இரண்டு தீர்க்கதரிசிகளும் இரத்தசாட்சியாக மரித்து உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு தம்முடைய து¡தர்கள் ஏழு பாத்திரங்களின் வாதைகளை பூமியின் மீது ஊற்ற அனுமதிப்பார். பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு உலகில் இன்னமும் இருக்கும் மக்கள் இந்த ஏழு பாத்திரங்களின் வாதைகளைத் தமது பரிசாகப் பெறுவர். அப்பொழுது தான் அவர்கள் பயத்தால் பிடிக்கப்பட்டு கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள். ஆனால் இதற்கு எந்த பயனும் இருக்காது. ஏனெனில் கர்த்தரின் அன்பின் மீதான உண்மை விசுவாசமாய் இருக்காது.
இவ்வுலகம் அழிக்கப்படுகையில் நீதிமான்கள் தமது நித்திய பரலோகத்தையும், நித்திய உயிர்த்தெழுதலையும், நித்திய அக்கினியில் துன்பப்படுவர். இதனால் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அனைவரும் விசுவாசித்து பாவமன்னிப்பை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படியாக தமது பாவமன்னிப்பைப் பெற்றவர்கள் கர்த்தர் வாக்குதத்தம் செய்த புதிய உலகத்தை விசுவாசிப்பதால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எல்லோருக்கும் பிரசங்கிக்கிறார்கள்.
வசனம் 14: இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.
இரட்சிக்கப்பட்டதன் மூலம் இரத்த சாட்சியாகி உயிரோடெழுப்பப்படுவதிலும் எடுத்துக் கொள்ளப்படுதலிலும் பங்கேற்றவர்களைத் தவிர மீதியுள்ள புறஜாதியாருக்கும் இஸ்ரவேலருக்கும் கர்த்தரிடமிருந்து மூன்றாவது அபாயம் வரும்.
ஆறாவது து¡தன் தன் எக்காளத்தை ஊதுவதிலிருந்து தொடங்கும் வாதையும் ஏழாவது எக்காளம் ஊதப்படுகையில் தொடங்கும் ஏழு பாத்திரங்களின் வாதைகளும், இரண்டாவது பயங்கரம் என அழைக்கப்படுகின்றது. ஏழாம் எக்காளத்தின் வாதைகள் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பாகம், நடுப்பாகம் மற்றும் இறுதிப் பாகம் இவையாகும். இயற்கை வாதைகளும், அந்திகிறிஸ்துவால் பரிசுத்தவான்கள் கொல்லப்படுவதும் முதல் மற்றும் இரண்டாம் பயங்கரங்கள் என அழைக்கப்படுகின்றன. உலகத்தை முற்றிலுமாக அழிக்கக்கூடிய வாதைகள் மூன்றாவது பயங்கரம் ஆகும். இந்த பூமியில் தொடர்ந்துமிருக்கும் பாவிகளின் மீது ஊற்றப்படும் கர்த்தரின் கோபத்தினால் நிரப்பப்பட்ட பாத்திரம் மூன்றாவது வாதையாகும்.
வசனம் 15: ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
“கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின” என்ற சொற்றொடர் இவ்வுலகில் ஏழு பாத்திரங்களின் வாதைகள் தொடங்கும் போது தம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பரிசுத்தவான்களும் கர்த்தரின் சேவகர்களும் ஏற்கனவே பரலோகத்தில் இருப்பார்களென்பதைக் காட்டுகிறது. இந்த சமயத்தில் பூமியில் கர்த்தரின் பிள்ளைகள் யாரும் இருக்க மாட்டார்கள். இதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும், “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்”
இந்நேரத்தில் பரலோகத்திலுள்ள தேவனை பரிசுத்தவான்கள் புகழுவர். ஆனால் ஏழு பாத்திரங்களின் அனைத்து வாதைகளும் ஊற்றப்பட்ட பிறகு, அவர்களும் புதுப்பிக்கப்பட்ட உலகிற்கு தேவனுடன் இறங்கி அவருடனே கூட இவ்வுலகில் ஆயிரம் வருடங்கள் அரசாளுவர். இதனைத் தொடர்ந்து புதிய வானத்தையும் புதிய பூமியையும் தேவனும் பரிசுத்தவான்களும் அரசாளுவர்.
நம்மைப் பாவங்களிலிருந்து விடுவித்து ராஜாவாக நம்மை ஆளுவதற்கு பதிலாகநமது தேவன் இதுவரை நம் பணியாளராக பணிபுரிந்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தமது இரட்சிப்பாக விசுவாசித்தவர்களை கர்த்தரின் பிள்ளைகளாக்கும் தமது கிருபையை நமக்குத் தந்தார். நம்முடைய தேவன் நமது நித்திய அரசனாக இருப்பதால் அவர் தமது மக்களை நித்தியமாக அரசாளும்படிச் செய்வார். அல்லேலு¡யா, தேவனுக்கு நன்றிகள்.
வசனம் 16: அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
எல்லா மகிமையையும் பெறத்தக்கவர் கர்த்தராவார். எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டவர்கள் முகங்குப்புற விழுந்து கர்த்தரைப் புகழ்ந்து அவரை ஆராதிப்பதே சரியானதாகும். பாவிகளை இரட்சிக்க இவற்றை எல்லாம் செய்த நமது தேவன் பரிசுத்தவான்களாலும் படைக்கப்பட்ட அனைத்தினாலும் புகழையும் ஆராதனையையும் நித்தியமாய் பெறுவதற்கு தகுதியானவர்.
வசனம் 17: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யபாரம் பண்ணுகிறீர்.
அப்போதிலிருந்து தனது மக்களுடன் நித்தியமாக அரசாள, நம் தேவன் சாத்தானை வென்று பிதாவாகிய கர்த்தரிடமிருந்து அதிக வல்லமையைப் பெற வேண்டும். நம் தேவன் நித்திய காலமும் அரசாளுவார். அப்படி செய்ய அவர் தகுதியானவரே. நான் அவருக்கு மகிமையை செலுத்துகிறேன். அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் மறையச் செய்த தேவன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தவர்களை இரட்சித்தவர் அவர். தன் எதிரிகளையும் அவர் நியாயந்தீர்த்தார். அவரின் மகத்துவமுள்ள வல்லமையைப் பெற்று நித்தியமாக ஆளுவதற்கு அவர் தகுதியானவரே. கர்த்தரின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்பவர்கள். தேவனின் வல்லமை மற்றும் அன்பினால் கர்த்தரை நித்தியமாகப் புகழும் மகிமையினால் தரிப்பிக்கப்பட்டிருப்பர்.
வசனம் 18: ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
ஏழு பாத்திரங்களின் வாதைகளுடன், ஆவிக்குரியபடி புறஜாதியாராக இருப்பவர்களின் சா£ர அழிவும் இப்போது வரும். எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய கர்த்தர் நியாயந்தீர்க்கும் நேரம் அது என இவ்வார்த்தைக் கூறுகிறது. தனது ஊழியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும், பரிசுத்தவான்களுக்கும், அவரிற்கு மரியாதைச் செய்பவர்களுக்கு பரிசுகளை வழங்கும் அதே நேரம் அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படியாமல் அதற்கெதிராக நின்றவர்களை அழிப்பார். தன்னுடைய தனிப்பட்ட தன்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களின் மீது தேவன் தனது கோபத்தின் தீர்ப்பை எடுத்து வருவார். ஆனால் பரிசுத்தவான்கள் தன்னுடன் மகிமைப்படுவதை அனுமதிப்பார். தேவன் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் நியாயாதிபதியாவாரென இது பொருள்படும்.
மறுபடியும் பிறந்தவர்களின் ராஜாவாக தனது சிங்காசனத்தில் அமர்ந்து நம்தேவன் அனைவரையும் தீர்க்கும் போது எல்லாப்பாவிகளும் நீதிமான்களும் தமது செய்கைக்கேற்ற நியாயத் தீர்ப்பைப் பெறுவர். இப்போது அவரின் நியாயத்தீர்ப்பின் படி பரிசுத்தவான்களுக்கு பரலோகத்தையும், நித்திய ஜீவனையும் அளிப்பார். பாவிகளுக்கோ நித்திய அழிவையும், நரகத் தண்டனை¨யும் வழங்குவார். இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மையும் அவர் மக்களின் ஆளுகையின் ஆசீர்வாதமும் எப்போதும் இருக்கும். இந்நேரத்தில் முதலாவது உலகம் முடிவடையும், இரண்டாவது உலகமாகிய கிறிஸ்துவின் ராஜ்யம் உருவாகும்.
வசனம் 19: அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
கர்த்தர் தனது பரிசுத்தவான்களையும், நீதிமான்களையும், தம் ஆலயத்தில் வாழும் ஆசீர்வாத்தால் ஆசீர்வதிப்பார். இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவினுள் மனிதர்களுக்குள் செய்யப்பட்ட கர்த்தரின் வார்த்தையாகிய வாக்குத்தத்தத்தின்படி நிறைவேற்றப்படுகின்றன. கர்த்தரின் ராஜ்யமானது தீர்க்கதரிசனமாகிய கர்த்தரின் வார்த்தையிலிருந்து தொடங்குகிறது. இந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலால் அது முடிவு பெறுகிறது.
உயிரோடெழுப்பப்படுதல், பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல் இயேசு கிறிஸ்துவுடன் ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் பங்கேற்றல், ராஜாவாக நித்தியமாக ஆளும் ஆசீர்வாதத்தைப் பெறுதல் ஆகிய கர்த்தரின் வாக்குத்தத்தங்களை இஸ்ரவேல் மக்களுக்கும் புறஜாதியாருக்கும் சமமாக அளிப்பார். மேலும் இறுதிகாலத்தில் இஸ்ரவேலர்கள் இரட்சிக்கப்படுவதும், நாம் இரட்சிக்கப்படுவதும் ஒரே மாதிரியானதாக இருக்கும். நம்மனைவரையும் இந்நேரத்தில் இரத்த சாட்சிகளாக்கி ஒரே மாதிரியாக நம்மை உயிரோடெழும்பி அதன் பிறகு ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டு ஒரே மாதிரியான மகிமையால் நம்மை உடுத்துவார். சா£ரப்பிரகாரமாக நாமும் இஸ்ரவேலர்களும் வேறுபட்டவர்களாய் இருந்தாலும் ஆவிக்குரியபடி நாமனைவரும் ஒரே மாதிரியான கர்த்தரின் பிள்ளைகளே.
ஏழு வருடங்களாக நடைபெறப் போகும் மகா உபத்திரவத்திற்கு முன்னதாக மறுபடியும் பிறந்தவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என அநேக மக்கள் கூறுகின்றனர். வேதாகமப்படிக் கூறினால் மகா உபத்திரவத்தின் ஏழாண்டு காலத்தின் முதல் மூன்றரை ஆண்டுகள் வரை மக்கள் தொடர்ந்து நற்செய்தியைக் கேட்டு இரட்சிக்கப்படுவர். அந்திகிறிஸ்து அப்போது தோன்றுவான். பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பார்கள். அவர்களுடைய உயிர்தெழுதலுக்கும் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கும் பிறகு கிறிஸ்து அளிக்கும் ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தி நடைபெறும். அதன் பிறகு பரிசுத்தவான்களை ஆயிரம் வருடங்கள் அரசாள அனுமதிப்பார்.
தாம் இரத்தசாட்சியாகும், உயிரோடெழுப்பும், எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தைக் குறித்த சரியான அறிவு பரிசுத்தவான்களிடம் இருக்க வேண்டும். இந்தநேரம் தெரியாவிட்டால் அவர்கள் தம் குழுப்பங்களில் அலைந்து ஆவிக்குரியபடி அதில் இறந்து போவார்கள்.
இறுதிகாலத்தில் நடக்கப் போகிறவைகளைக் குறித்த கர்த்தரின் திட்டங்களைச் சரியாக அறிந்து கொண்டவர்கள் தம்முடைய உயிர்த்தெழுதலையும் எடுத்துக் கொள்ளப்படுதலையும் விசுவாசித்து நற்செய்திக்கு சிறப்பாக ஊழியம் செய்வர். இவ்வுலகில் நம்பிக்கை வைக்க முடியாது என அறிந்தவர்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களின் அதே நம்பிக்கையைப்பெற்றிருக்க வேண்டும். கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்பதினால் பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக மரிக்கிறார்கள்.
காலங்களைப் பிரித்துணரும் விசுவாசம் இப்போது மிகவும் அவசியமானதாயிருக்கிறது. பயங்கரமான வாதைகளும் உபத்திரவங்களும் முழு உலகிலும் இறங்கி அந்திகிறிஸ்து தோன்றுவதற்கான நேரமும் இப்போது வந்து விட்டது. உங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுவதற்கான நேரம் இதுவே. மகா உபத்திரவத்தின் அனைத்து உபத்திரவங்களுக்குள்ளும் நாம் செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் வருகைக்காகவும், நமது உயிர்த்தெழுதலுக்காகவும், எடுத்துக் கொள்ளப்படுவதற்காகவும், கிறிஸ்துவினுடனான ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் பங்கேற்பதும் நமது பாராட்டத்தக்க நம்பிக்கையாகும். இக்காலத்தில் மிகச் சரியான விசுவாசத்தைப் பெற வேண்டுமானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் பேழைக்குள் நாம் பிரவேசிக்க வேண்டும்.
இந்த நிகழ்காலத்தை அறிவதன் மூலம், மிகவும் அவசரமாக தேவைப்படும் விசுவாசத்தையும் இந்த காலத்திற்கு தேவையான விசுவாசத்தையும் நீங்கள் பெற ஜெபிக்கிறேன்.