• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 20-1] பாதாளத்திற்குள் வலுசர்ப்பம் அடைக்கப்படும் (வெளி 20:1-15)

2021.04.24 30
(வெளி 20:1-15)
“ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் அவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.”
 
 
விளக்கவுரை
 
வசனம் 1: ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்.
நற்செய்திக்காக பாடுபட்ட பரிசுத்தவான்களுக்கு ஈடுசெய்ய நமது தேவனாகிய கர்த்தர் கிறிஸ்துவின் ராஜ்யத்தை அவர்கள் ஆயிரம் வருடங்கள் ஆளும்படி பரிசளிப்பார். அப்படி செய்வதற்கு ஆயிரம் வருடங்களாக பாதாளத்தினுள் வலுசர்ப்பத்தை கட்டுப்பாட்டில் வைக்க அவனைப் பிடிக்குமாறு கர்த்தர் தனது தூதர்களுக்கு முதலில் கட்டளையிட வேண்டும். கர்த்தர் முதலில் இதனைச் செய்ய வேண்டும். ஏனெனில் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் பரிசுத்தவான்கள் வாழ்வதை ஏதுவாக்க வலுசர்ப்பம் பிடிக்கப்பட்டு பாதாளத்தினுள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆகவே பாதாளத்தின் திறவுகோலையும் மிகப் பொ¢ய சங்கிலியையும் கர்த்தர் தனது தூதனுக்கு கொடுக்கிறார். மேலும் வலுசர்ப்பத்தைப் பிடித்து அதனைப் பாதாளத்திற்குள் தள்ளும் பணியை தொடங்குமாறு அவனுக்கு கட்டளையிடுகிறார்.
 
வசனம் 2: பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டி வைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து அவர்களை விழச் செய்தது இந்த சர்ப்பமே. வேதாகமம் இந்த சர்ப்பத்தை வலுசர்ப்பம் என்றும் சாத்தான் என்றும் அழைக்கிறது. கர்த்தர் இந்த வலுசர்ப்பத்தைப் பிடித்து ஆயிரம் வருடங்களுக்கு அதனைப் பாதாளத்தில் அடைத்து வைப்பார். இப்படி அவனை அடைத்து வைப்பதால் ஆயிர வருட அரசாட்சியில் கிறிஸ்துவுடனே கூட பரிசுத்தவான்களால் அமைதியுடன் வாழ முடியும்.
 
வசனம் 3: அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
கிறிஸ்துவின் ராஜ்யத்தை இப்பூமியில் கட்டவும், தேவனுடனே கூட பரிசுத்தவான்கள் ஆயிரம் வருடங்கள் அரசாட்சி செய்யவும், கர்த்தர் வலுசர்ப்பத்தை பாதாளத்திலே ஆயிரம் வருடங்கள் கட்டி வைப்பார். இப்படி செய்வதினால் பரிசுத்தவான்களை அவனால் ஏமாற்ற முடியாது.
“அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்” என்று இவ்வசனம் இங்கு கூறுகிறது. ஆயிரம் வருடங்கள் கடந்த நிலையில் கர்த்தர் வலுசர்ப்பத்தை சிறிது காலத்திற்கு அவிழ்த்துவிடுவார். அவன் மீண்டும் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தத் தொடங்குவான். அப்பொழுது கர்த்தர் அவனை நிரந்தரமாக நரகத்திற்கு அனுப்புவதால் அவனைக் காணவே முடியாது.
 
வசனம் 4: அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப் பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
கிறிஸ்துவின் ராஜ்யத்தில் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் நியாயந்தீர்ப்பதற்கான அதிகாரத்தை பெறுவார்கள். கிறிஸ்துவின் ஆசாரியர்களாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் தேவனுடனே கூட ஆயிர வருட அரசாட்சியில் அரசாளுவார்கள். இயேசுவிற்கு சாட்சியாகவும், தம்முடைய நம்பிக்கையை காக்கவும் இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களும் மிருகத்தின் குறியீட்டை பெறாமலும் அவனின் உருவத்தை வணங்காதவர்களும் இந்த ஆட்சியின் குடிமக்கள் ஆவர்.
உபத்திரவ காலத்தின் போது அந்திகிறிஸ்துவால் இரத்த சாட்சிகளாக்கப்பட்டது இவர்களே ஆயிரம் வருடங்களுக்கு வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் அவர்கள் வாழ்ந்து அதனை அரசாளும்படி அவர் அவர்களை உயிரோடெழுப்புவார். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்ற அனைவரும் இதனைப் போன்ற ஆசீர்வாதத்தைப் பெறுவர்.
தேவனால் இரண்டு வகையான உயிர்த்தெழுதல்கள் வழங்கப்படுகின்றன. அவை முதலாம் உயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் உயிர்த்தெழுதல் ஆகியவையாகும். ஆயிரவருட அரசாட்சியில் வாழும் பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்ற அதற்கு சொந்தமானவர்கள். இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்ற யாவரும் கிறிஸ்துவின் ராஜ்யமான ஆயிர வருட அரசாட்சியில் மகிமையுடன் வாழ்வதிலும் பங்கேற்பர். இயேசு கிறிஸ்து எல்லாப் பரிசுத்தவான்களையும் எடுத்துக் கொள்ள வரும் போது முதலாவது உயிர்த்தெழுதல் நிகழும் (1 தெசலோனிக்கேயர் 4:15-17). இரண்டாவது ஆயிர வருட அரசாட்சியின் முடிவில் நடைபெறும், ஏனெனில் பாவிகளுக்கு நித்தியமான மரணத்தை வழங்குவதற்காக இது ஏற்படுத்தப்பட்டது.
பரிசுத்தவான்கள் ஆயிரம் வருடங்கள் ஆளத் தேவையான அதிகாரத்தைக் கொடுத்தது மகத்துவமுள்ள தேவனாகும். கிறிஸ்துவின் ராஜ்யம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் தேவனின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதன் மீதுள்ள விசுவாசத்தைப் பாதுகாப்பதற்காக தம்முடைய உயிரை விட்டார்கள்.
 
வசனம் 5: மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
தேவனிடமிருந்து தமது பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளாதவர்கள், இவ்வுலகின் வாழ்வு முடிந்து தேவனிடம் செல்லும் போது பரிசுத்தவான்களுக்கு அவர் அளிக்கப் போகும் முதலாவது உயிர்தெழுதலில் அவர்களால் பங்கு பெற முடியாது. பரிசுத்தவான்கள் ஆயிரம் வருடங்களாக கிறிஸ்துவின் ராஜ்யத்தில் மகிழ்ந்திருந்தாலும், பாவிகள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்பதில்லை. ஆனால் அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்பார்கள். முதலாம் உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதத்தைப் பெற்ற பரிசுத்தவான்கள் மகிமையுடனும் செல்வத்துடனும், கிறிஸ்துவின் ராஜ்யத்தில் ஆயிரம் வருடங்கள் அரசாளுவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருப்பதே இதற்கான காரணம்.
ஆயினும் கூட “இரண்டாவது உயிர்த்தெழுதலை கர்த்தர் பாவிகளுக்கு அனுமதிப்பார்.” ஏன்? ஏனெனில் இரண்டாம் முறை அவர்கள் உயிரோடெழும்புகையில் கர்த்தர் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தீர்க்கும் பொருட்டு மரித்தோரிலிருந்து அவர்களை உயிரோடெழுப்புவார். அவர்களுடைய பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படும் பொருட்டு அவர்கள் உயிரோடெழும்புவது அவர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பாவிகளுடைய உயிர்த்தெழுதல் பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலில் இருந்து மாறுபட்டுள்ளது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தமைக்காக முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்றவர்களைத் தவிர வேறு யாரையும் ஆயிரம் வருடங்கள் வரை வாழுவதை தேவன் அனுமதிக்க மாட்டார். ஆகவே நீதிமான்களின் உயிர்த்தெழுதல் பாவிகளின் உயிர்த்தெழுதலுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நடைபெறும். நீதிமான்களின் உயிர்த்தெழுதலானது அவர்கள் நித்திய ஜீவனையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதற்குமாகும். ஆனால் பாவிகளின் உயிர்த்தெழுதலானது அவர்களின் பாவங்களுக்கான நித்தியத் தண்டனையை பெறுவதற்காகும்.
 
வசனம் 6: முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கேற்றவர்களின் மீது இரண்டாம் மரணத்திற்கு எந்த அதிகாரமுமில்லை. இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்றவர்கள் ஆயிர வருட அரசாட்சியில் அரசாளப் போவதால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
 
வசனம் 7-8: அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
ஆயிரம் வருடங்கள் பாதாளத்தில் அடைபட்டிருந்த வலுசர்ப்பம் விடுதலையானவுடன் பரிசுத்தவான்களை எதிர்த்து நிற்கும் படி அவன் எழுந்து நிற்பான். ஆகவே அவனால் மீண்டும் எழுந்து வர முடியாதவாறு அக்கினியும் கந்தகமும் எரிகிற நரகத்தில் கர்த்தர் அவனை எறிந்து விடுவார். இந்த தீர்ப்பிற்கு பிறகு வலுசர்ப்பத்தை நரகத்தில் மட்டுமே காண முடியும்.
“மறுபடியும் பிறவாதவர்கள் ஆயிர வருட அரசாட்சியின் போது அதில் பங்கேற்கக் கூடும் என இது பொருள்படுகிறதா” என அப்பொழுது நாம் கேட்கக்கூடும். இதற்கான பதில் “ஆமாம்” என்பதாகும். கிறிஸ்துவின் ராஜ்யத்தில் அநேக பூலோக மக்கள் வாழ்வதாக வெளி 20:8 கூறுகிறது. இம்மக்கள் கர்த்தரால் புதிதாக படைக்கப்பட்டவர்களா அல்லது இப்பூமியில் முன்பாகவே வாழ்ந்தவர்களா என நமக்கு நிச்சயமாகத் தொ¢யாது. ஆனால் நமக்குத் தொ¢ந்தது என்னவெனில் கர்த்தர் அவர்களை அறிவார். பரிசுத்தவான்கள் ஆளுகைச் செலுத்தும்படியாக பெருந்திரளானோர் இருப்பர். அவர்களின் எண்ணிக்கை கடற்கறையின் மணலை ஒத்ததாயிருக்கும்.
பரிசுத்தவான்கள் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் வாழும் போது பூமியின் மக்களை இன்னமும் அவர்கள் காண்பார்கள் என்பது உண்மையாகும். பரிசுத்தவான்களுக்கு சேவை செய்யும் விதமாக அவர்களிருப்பர். அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரையின் மணலை ஒத்ததாயிருக்கும். பரிசுத்தவான்களை எதிர்க்கும் பொருட்டு வலுசர்ப்பத்துடன் அவர்கள் ஐக்கியமாகினாலும் கர்த்தரால் எடுத்து வரப்படும் அக்கினியால் அவர்கள் அழிக்கப்பட்டு அவருடைய வெள்ளை சிங்காசனத்தின் தீர்ப்பினைப் பெற்று எரியும் நெருப்பினுள் நித்தியமாக வீசப்படுவர். இத்துடன் ஆயிர வருட அரசாட்சி முடிவிற்கு வரும். இதன் பிறகு பரிசுத்தவான்கள் நித்தியமாக வாழும் பொருட்டு புதிய வானம் புதிய பூமிக்குள் பிரவேசிப்பார்கள்.
 
வசனம் 9: அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
வலுசர்ப்பமானது சாத்தானாகும். இவன் கர்த்தரையும் அவரின் பரிசுத்தவான்களையும் தொடர்ந்து எதிர்த்து நின்றான். கிறிஸ்துவின் ராஜ்யத்தில் வாழும் பூலோகத்தின் மக்களை அவன் ஏமாற்றி பரிசுத்தவான்களை பயமுறுத்தினாலும் கர்த்தர் பரலோகத்திலிருந்து அக்கினியை எடுத்து வந்து அவர்களை முற்றிலுமாக அழித்துப் போடுவார். மேலும் தன்னையும் தனது பரிசுத்தவான்களையும் மீண்டுமாக அவன் எதிர்த்து நிற்காதிருக்க செய்ய வலுசர்ப்பத்தை அவர் நித்திய அக்கினியில் எறிவார்.
 
வசனம் 10: மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே வலுசர்ப்பத்தை வீசுவதன் மூலம் அவன் இரவும் பகலும் துன்புறுவதை கர்த்தர் உறுதி செய்வார். இது கர்த்தா¢ன் நீதியின் நியாயத்தீர்ப்பாகும். இந்த துன்பத்தை வலுசர்ப்பமும் அவனைப் பின்பற்றுவோரும் அனுபவிக்கத் தகுதியானவர்களே.
 
வசனம் 11: பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
பரிசுத்தவான்கள் ஆயிரம் வருடங்களுக்கு அரசாளும் படி செய்து கர்த்தர் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உருவாக்கி இவ்விடத்தில் பரிசுத்தவான்களுடனே நித்தியமாக அரசாளுவார். இதனை நிறைவேற்றும் பொருட்டு கர்த்தர் தம்முடைய அனைத்துப் பணிகளையும் அவற்றின் முடிவிற்கு எடுத்து வர வேண்டும். அவருடைய இறுதி வேலையாகிய இந்த கடைசி செயல் தேவன் தம்முடைய வெள்ளை சிங்காசனத்தில் நீதிபதியாய் அமர்ந்து செய்கைகளின் புத்தக்தில் தம் பெயர்கள் எழுதப்பட்டவர்களுக்கு தம்முடைய கடைசி தீர்ப்பை வழங்குவதாகும். ஜீவ புத்தகத்தில் தம் பெயர்கள் எழுதப்பட்டவர்கள் இத்தீர்ப்பிற்கு விதிவிலக்காவர்.
இத்துடனே கூட பாவிகளுக்கான கர்த்தா¢ன் தீர்ப்பு முற்று பெறும். இதற்கு பிறகு புதியவானம் மற்றும் புதிய பூமி ஆகியவற்றின் ஆளுகைத் தொடங்கும். நம்முடைய தேவன் முதலாவது உலகையும், வானத்தையும் மறையச் செய்து இரண்டாவது உலகமாகிய புதிய வானத்தையும், புதிய பூமியையும் தோன்றச் செய்து இப்பரலோக ராஜ்யத்தில் பரிசுத்தவான்களை வாழ செய்வார். ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் மக்கள் குழுவிற்கு புதிய வானத்தையும் புதிய பூமியையும் கொடுக்கும் கர்த்தர் செய்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பவர்களுக்கு நரகத்தண்டனை வழங்குவார்.
 
வசனம் 12: மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் அவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
இச்சமயத்தில் கிறிஸ்து அளிக்கும் தீர்ப்பானது கடைசித்தண்டனையை தீர்மானிக்கும். அதாவது பாவிகளுக்கு நரகத்தண்டனையை வழங்கும் தன்னுடைய கடைசி தீர்ப்பை தேவன் வழங்குவார். செய்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளபடி அவர்களுடைய செயல்களுக்கு தக்க தண்டனையை அவர்கள் பெறுவர். இப்படியாக பாவிகள் இரண்டுமுறை மரிப்பர். நரகத் தண்டனையானது அவர்களின் இரண்டாவது மரணமாகும். இதனை நித்திய மரணம் என வேதாகமம் கூறுகிறது. ஆகவே அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இப்போது தேட வேண்டும். அவர்கள் பூமியில் வாழும் போது அதனை விசுவாசித்து அதன் மூலம் ஜீவ புத்தகத்தில் தம் பெயர்கள் எழுதப்படும் ஆசீர்வாதத்தை அவர்கள் பெற வேண்டும்.
 
வசனம் 13: சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
“சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.” அனைத்துப் பாவிகளும் தம்முடைய பாவங்களுக்கான இறுதித் தண்டனையைப் பெற வேண்டும். இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் மரணமும், பாதாளமும் அதாவது சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு உயிருடனே இருக்கும் போது அவனால் கட்டுப்படுத்தப்பட்டு கர்த்தரை எதிர்த்து நின்று அவருக்கு எதிராகப் பாவம் செய்தவர்கள் அடைக்கப்படும் இடம் இதுவென இது குறிக்கிறது. சிறிது நேரம் அவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து தண்டிப்பதை நிறுத்தி வைத்திருந்தாலும் இப்போது இறுதி தீர்ப்பிற்கான நேரம் வந்துவிட்டது என இவ்வசனம் கூறுகிறது.
மக்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் தாம் யாருக்கு சொந்தமானவர்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. பூமியில் வாழும் போது சாத்தானின் ஊழியர்களாக பணியாற்றியவர்கள் தண்டனைக்கான உயிர்த்தெழுதலின் மூலம் தம்முடைய இறுதித் தீர்ப்பைப் பெற மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்படுவர். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு பணியாற்றியவர்கள் நித்திய வாழ்வு மற்றும் ஆசீர்வாதங்களின் உயிர்த்தெழுதலுக்கு சொந்தமானவர்கள்.
ஆகவே மனித குலத்தின் பாவங்களைத் துடைக்க தேவன் உபயோகித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது மிகவும் முக்கியமானது என மக்கள் இப்பூமியில் வாழும் போது உணர வேண்டும். இப்பூமியில் சாத்தானின் ஊழியர்களாகப் பணியாற்றியவர்கள் தண்டனைக்கான உயிர்த்தெழுதலின் மூலம் எழுப்பப்படும் அதே நேரம் நம் தேவனுடைய நீதியின் செய்கைகளுக்கு ஊழியம் செய்தவர்கள் நித்திய ஜீவன் மற்றும் ஆசீர்வாதங்களுக்கான உயிர்த்தெழுதலினால் எழுப்பப்படுவார்கள். தம்முடைய மீறுதல்களுக்காக அனைத்துப் பாவிகளும் நியாயந்தீர்க்கப்பட்டு நரகத்தில் தமது இறுதித் தண்டனையைப் பெறுவர். நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் நிவாரணம் செய்ய தேவன் உபயோகித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பது எத்தனை முக்கியமானது என்பதை இங்கு நாம் தெளிவாகக் காண்கிறோம்.
 
வசனம் 14: அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
சாத்தானின் பக்கமாக நின்று கொண்டு, கர்த்தருக்கு முன்பாக மனிதர்கள் செய்த பாவங்களுக்கான நியாயத் தீர்ப்பைக் குறித்து, இது நமக்கு கூறுகிறது. சாத்தானை நோக்கி மக்களை வழிநடத்திய தீயவர்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் தண்டனையானது எரியும் கடலில் வீசப்படுவதாகும். பாவிகளுக்காக கர்த்தர் அளிக்கும் இரண்டாம் மரணம் இதுவாகும். மேலும் அக்கினிக் கடலின் தண்டனையும் இதுவாகும். இங்கு வேதாகமம் குறிப்பிடும் மரணம் அப்படியே மறைந்து போவது மட்டுமில்லை. ஆனால் அது பயங்கரமான நரகத்தில் சம்பவிக்கும் நித்தியத்தண்டனையாகும்.
வேத வசனங்களில் கூறப்பட்டுள்ள இரட்சிப்பு தற்காலிகமானதல்ல. அது நித்தியமானது. இப்பூமியில் வாழும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தவர்கள் நித்தியமான பரலோக ராஜ்யத்தில் பிரவேசித்து என்றென்றும் களிப்புடன் வாழ்வர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த விசுவாசிகளுக்கு அளிக்கப்படும் பரிசிற்கும் அவிசுவாசிகளுக்கு அளிக்கப்படும் தண்டனைக்கும் உள்ள வித்தியாசமானது வானத்திற்கும் பூமிக்குமுள்ள வித்தியாசத்தைப் போன்று பொ¢தாயிருக்கும்.
 
வசனம் 15: ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
காணப்படாதவனெவனோ என்ற வார்த்தையின் மூலமாக மக்களின் பெயர்கள் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதா இல்லையா என்பது எதை பொறுத்தது எனக் கூறுகிறது. அது அவர்கள் ஒழுங்காக ஆலயம் செல்லுபவர்களா இல்லையா என்பதையும், அவர்களின் ஆலயம் எப்பிரிவைச் சார்ந்தது என்பதையும் பொருட்படுத்தாமல் மக்களின் பாவங்களைப் பனியைப் போல் வெண்மையாக்கிய நற்செய்தி வார்த்தையாகிய நீரையும் ஆவியையும் விசுவாசித்தார்களா என்பதைப் பொறுத்திருக்கிறது. ஆகவே யாருடைய பெயர்கள் தேவனுடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்படவில்லையோ அவர்கள் எந்த விதிவிலக்குமில்லாமல் அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள்.
உலகின் மதசம்பந்தப்பட்ட மக்களுக்கு தம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெறுவதை விட தம்முடைய மத சடங்குகளில் ஈடுபடுவதே குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருக்கிறது. ஆனால் கர்த்தருக்கு முன்பாக நிற்கும் போது இயேசு அளித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஒருவரின் இருதயத்தில் காணப்படாவிட்டால் இந்நபரின் பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படாது. மேலும் அவன்/அவள் மிகச் சிறந்த கிறிஸ்தவராக இருந்தாலும் கூட எரியும் கடலில் அவன்/அவள் வீசப்படுவார்.
ஆகவே நீங்கள் உலகில் வாழும் போதே உங்கள் அனைத்து பாவங்களையும் மறையச் செய்த தேவனுடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்கள் காதுகளால் கேட்டு உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படும் மகிமையை நீங்கள் பெறுவீர்கள்.